கோடை விடுமுறை முடிந்து ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன


கோடை விடுமுறை முடிந்து ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன
x
தினத்தந்தி 3 Jun 2019 11:00 PM GMT (Updated: 3 Jun 2019 7:53 PM GMT)

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.

திருப்பூர், 

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்ததையொட்டி நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவர்கள் நேற்று அதிகாலையிலேயே எழுந்து பள்ளிக்கு செல்ல தயாராகி விட்டனர்.

பெற்றோரும் தங்கள் குழந்தைகளை குளிப்பாட்டி, சீருடை அணிவித்து, பெண் குழந்தைகளுக்கு இரட்டை சடை போட்டு, அதில் மல்லிகைப்பூவை வைத்து, வேண்டிய உணவு வகைகளை தயாரித்து கொடுத்து, புத்தகப்பையை முதுகில் மாட்டிவிட்டு தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் அழகை ஆனந்த கண்ணீருடன் பார்த்து ரசித்தனர். பலர் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு அழைத்துச்சென்றனர். பல பள்ளிகளில் 1-ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த குழந்தைகள் அழுது கொண்டே வந்தனர். ஜெய்வாபாய் பள்ளியில் எல்.கே.ஜி.. யு.கே.ஜி. வகுப்புகளுக்கு வந்த குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

கோடை விடுமுறையை கழித்த மாணவர்களும் மீண்டும் பழைய நண்பர்களை சந்திக்க போகும் ஆவலில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். மாணவர்களில் சிலர் தங்கள் நண்பர்களுடன் நடந்தும், பெற்றோருடன் இருசக்கர வாகனங்களிலும், பஸ்களிலும், ஆட்டோவிலும் வந்தனர். காலை 8 மணி முதல் மாணவர்கள் பள்ளிக்கு வரத்தொடங்கினார்கள். சரியாக 9 மணிக்கு இறைவணக்கம் கூட்டம் நடைபெற்றது. பின்னர் மாணவர்கள் அவரவர் வகுப்புகளுக்கு சென்று அமர்ந்தனர். மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு, பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் தங்கள் வகுப்பு நண்பர்களுடன் மதிய உணவை பகிர்ந்து உண்டனர். விடுமுறையில் சென்ற ஊர்கள், சுற்றுலா தலங்கள், அங்கு தாங்கள் கண்டு ரசித்த காட்சிகளை பகிர்ந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பல நடுநிலைப்பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டிருப்பதால் அந்த வகுப்புகளுக்கு ஏற்கனவே சேர்ந்திருந்த குழந்தைகள் வந்திருந்தனர். அவர்களுக்கு அந்த பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களே பாடம் நடத்தினார்கள். மேலும் பலர் தங்கள் குழந்தைகளை நேற்று பள்ளிகளில் புதிதாக சேர்ந்தனர். ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை புதிதாக தமிழ்வழி, ஆங்கில கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதில் நேற்று பள்ளிக்கு வந்திருந்த எல்.கே.ஜி., யு.கே.ஜி. குழந்தைகள் இறைவணக்க கூட்டம் முடிந்தவுடன் வீடுகளுக்கு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

வருகிற 7-ந்தேதி குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து வரச்சொல்லி தலைமையாசிரியர் அறிவுறுத்தினார். இது குறித்து தலைமையாசிரியை கூறும் போது, பல குழந்தைகள் அழுது கொண்டே இருந்ததாலும், குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஆயா மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்கள் இன்னும் நியமிக்கப்படாததாலும் வருகிற 7-ந்தேதி வரச்சொல்லி உள்ளோம் என்றார்.

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளதால் திருப்பூர் நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்களில் மாணவ-மாணவிகள் கூட்டம் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது. பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் திருப்பூர் மாநகரில் காலை, மாலை நேரங்களில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

Next Story