நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
மைசூரு,
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா நேற்று முன்தினம் மைசூருவுக்கு வந்திருந்தார். அவர், மைசூருவில் தன்வீர்சேட் எம்.எல்.ஏ. ஏற்படுத்தியிருந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நேற்று காலை சித்தராமையா பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு
ேதசிய கல்வி கொள்கையில் அனைத்து மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் இந்தி மொழி கட்டாயம் என பரிந்துரை செய்துள்ளது. இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. இதனால் பிள்ளைகளுக்கு இந்தி மொழி கற்றுக்கொள்ள வேண்டிய சுமை ஏறுகிறது. இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. குழந்தைகள் அவர்களுக்கு விருப்பப்பட்ட மொழிகளை கற்றுக் கொள்ளவிட வேண்டும். இது ஒரு அரசின் கடமையும் கூட. அதை விட்டுவிட்டு கட்டாயமாக இந்த சுமையை ஏற்றுவது சரியானதல்ல. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இந்தி மொழி கற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகத்திலும் இந்தி மொழியை திணித்தால், தமிழ்நாடு போலவே நாங்களும் போராட வேண்டிய நிலை வரும். நிலம், நீர், மொழி விஷயத்தில் எக்காரணம் கொண்டும் நாங்கள் சமரசம் ஆக மாட்டோம். அதன்படி இந்தி மொழி கட்டாயம் ஆக்குவதற்கு விடமாட்டோம்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த இடங்களில் பா.ஜனதா அதிகளவில் வாக்குகளை பெற்றுள்ளது. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுகிறது. நாங்கள் ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாட்டில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினோம். தற்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகள் வித்தியாசங்கள் மாறி, மாறி வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாதிரியாகவும், சட்டசபை தேர்தலில் ஒரு மாதிரியாகவும், உள்ளாட்சி தேர்தலில் வேறு மாதிரியாகவும் வாக்குகள் வித்தியாசம் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்து நடந்த கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் கிடைக்கவில்லை. அந்த தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக கவனத்தில் கொண்டு தணிக்கை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story