இந்தி மொழி திணிப்புக்கு கர்நாடக தலைவர்கள் எதிர்ப்பு தமிழகம் போல் போராட்டம் நடத்துவோம் என சித்தராமையா எச்சரிக்கை
இந்தி மொழி திணிப்புக்கு கர்நாடக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகம் போல் போராட்டம் நடத்துவோம் என்று சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு
தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பள்ளி கல்வியில் இந்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் போராட்டங்கள் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கன்னடமே பொது மொழி
இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமி கூறியிருப்பதாவது:-
தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள இந்தி மொழி திணிப்பு விஷயம் எனது கவனத்திற்கு வந்துள்ளது. மும்மொழி கொள்கை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மொழியை பிறர் மீது திணிக்கக்கூடாது. இதுகுறித்து கூடுதல் விவரங்களை பெற்று மத்திய அரசிடம் தெரிவிப்போம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கர்நாடகத்தில் கன்னடமே பொது மொழி ஆகும். புதிய தேசிய கொள்கை மூலம் கன்னடர்கள் மீது இந்தி மொழியை திணிப்பதை சகித்துக்கொள்ள முடியாது. மொழியை தேர்ந்தெடுத்து கற்கும் விஷயத்தை அவரவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட மொழியை கற்க வேண்டும் என்று திணிக்க கூடாது.
எங்களின் நிலம், நீர் மற்றும் மொழி விஷயத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கர்நாடகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவரும், இந்த விஷயத்தில் கட்சி பாகுபாடின்றி சிந்தித்து செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகம் போல் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்றுக்கொள்ள முடியாது
இதுபற்றி போலீஸ் மந்திரி எம்.பி. பட்டீல் நேற்று விஜயாப்புராவில் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில், “அரசியல் அமைப்பு சட்டத்தில் கன்னடம் உள்பட பல்வேறு மாநில மொழிகள் இருக்கிறது. அதில் இந்தி மொழியும் ஒன்று. இந்தி மொழிக்கு என்று சிறப்பு அந்தஸ்து ஒன்றும் கொடுக்கப்படவில்லை. அதனால் இந்தி மொழியை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு மொழி, ஒரு கலாசாரத்தின் பெயரில் தேவையின்றி இந்தி மொழியை மத்திய அரசு, தென்இந்திய மாநிலங்கள் மீது திணிப்பதை நிறுத்த வேண்டும். பிரதமர் மோடி, இந்தி மொழி பேசுபவர்களின் அரசை போல் நடந்துகொள்வது சரியல்ல. பல்வேறு மொழி, பன்முக கலாசாரத்தை மதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
போராட்டம்
இதற்கிடையே இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில காங்கிரஸ் சார்பில் பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story