நன்கொடை பெறப்படுவதை தடுக்க அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவரத்தை ஒட்ட வேண்டும்; மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் மனு


நன்கொடை பெறப்படுவதை தடுக்க அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவரத்தை ஒட்ட வேண்டும்; மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் மனு
x
தினத்தந்தி 3 Jun 2019 11:00 PM GMT (Updated: 3 Jun 2019 9:33 PM GMT)

அரசு பள்ளிக்கூடங்களில் நன்கொடை பெறப்படுவதை தடுக்க மாணவர்கள் சேர்க்கை விவரத்தை ஒட்டி வைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

திருநங்கைகள் சிலர் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவாளர் அலுவலகத்தில் திருநங்கைகளின் திருமணம் பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் ஈரோட்டில் எங்களது திருமணத்தை பதிவு செய்யலாம் என்று பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றால், திருமணத்தை பதிவு செய்வதற்கான எந்த உத்தரவும் இல்லை என்று கூறுகிறார்கள். இதனால் எங்களை திருமணம் செய்து கொள்பவர்கள் பிரிந்து விட்டு சென்றுவிட்டால் உரிய நீதி கிடைக்க போராட முடியவில்லை. எனவே ஈரோட்டில் திருநங்கைகளின் திருமணத்தை பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என்.ஆர்.வடிவேல் தலைமையில் சிலர் கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் மேல்நிலை பள்ளிக்கூடங்களில் கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பரிவுகளில் பிளஸ்-1 வகுப்பு சேர்க்கைக்கு அருந்ததியர் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளை சேர்ப்பதில்லை. மேலும், பள்ளிக்கூடங்களில் தலைமை ஆசிரியர்களும், பெற்றோர் சங்க நிர்வாகிகளும் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு கட்டாய நன்கொடை வசூலிக்கிறார்கள். இதனால் ஏழை மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அனைத்து பள்ளிக்கூடங்களிலும் பாடப்பிரிவு வாரியாக மாணவர்கள் சேர்க்கையின் விவரங்களை அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘‘எங்களது பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்ட பகுதியில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களாக அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் சரிசெய்யப்படவில்லை. எனவே பள்ளத்தை சரிசெய்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இதேபோல் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இந்த அடைப்பை சரிசெய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறப்பட்ட இருந்தது.

நம்பியூர் அருகே தீத்தாம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் சந்திரிகா (வயது 18) என்ற மாற்றுத்திறனாளி மாணவி கொடுத்த மனுவில், ‘‘நான் நம்பியூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து முடித்து உள்ளேன். 600-க்கு 461 மதிப்பெண்களை பெற்றுள்ளேன். தற்போது கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் சேர்ந்துள்ளேன். எனக்கு கல்வி கட்டணத்திலும், விடுதி கட்டணத்திலும் விலக்கு அளித்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’’, என்று கூறிஇருந்தார்.

ஈரோடு சம்பத்நகரை சேர்ந்த நாராயணமூர்த்தி (வயது 55) என்பவர் கொடுத்த மனுவில், ‘‘கோவை சேர்ந்த ஒருவர் எனது மனைவி சாந்திக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறினார். கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி அவர் எனது மனைவியை துபாய் நாட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் பாதுகாப்பாற்ற சூழ்நிலையில் இருந்து வருகிறார். உணவு, அடிப்படை வசதி எதுவுமின்றி அவரை கொடுமைப்படுத்துகிறார்கள். இந்த தகவலை தொலைபேசி மூலமாக எனக்கு தெரிவித்தார். அவரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் செலவாகும் என்றார்கள். அதை நம்பி கோவை சேர்ந்த நபருக்கு கேட்ட தொகையை அனுப்பி வைத்தோம். ஆனால் எனது மனைவி மீட்கப்படவில்லை. எனவே வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும்’’, என்று கூறிஇருந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பொன்நகர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த நடராஜன்-சரஸ்வதி தம்பதி தங்களது பேரன் கதீசனுடன் (3) வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-

எங்களுடைய மகனும், மருமகளும் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். அந்த விபத்தில் பேரன் கதீசனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கதீசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். இந்தநிலையில் சத்தியமங்கலத்தில் உள்ள மருமகளின் பெற்றோர் கதீசனுக்கு சிகிச்சை அளிப்பதை தடுக்க முயற்சி செய்கிறார்கள். எனவே எங்களுடைய பேரனுக்கு சிகிச்சை அளிக்க உரிய பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகள் சிலர் கொடுத்த மனுவில், ‘‘கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றோம். தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் நடத்திய போட்டியிலும் வெற்றி பெற்று தேசிய போட்டியில் கலந்துகொண்டு விளையாட தகுதிபெற்றோம். மாணவி காவியாஞ்சலி தேசிய அளவிலான சிறந்த விளையாட்டு வீரர் விருதையும் பெற்றுள்ளார். இந்தநிலையில் சேலத்தில் பூப்பந்தாட்டக்கழகம் சார்பில் மாநில அளவிலான ஜூனியர் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் ஈரோடு மாவட்டத்துக்கான தகுதித்தேர்வை நடத்தாமல் வேறு அணி தேர்வு செய்யப்பட்டது. வேண்டுமென்றே ஈரோடு பூப்பந்தாட்டக்கழகத்தினர் எங்களை புறக்கணித்து உள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சிறந்த வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும்’’, என்று கூறிஇருந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவு ஊழியர்கள், மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குனர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்ட அரசாணைப்படி ஊதியம் மற்றும் நிலுவைத்தொகை வழங்கக்கோரி ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 225 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.

கூட்டத்தில் 2 பேருக்கு விலையில்லா தையல் எந்திரங்கள், ஒருவருக்கு விலையில்லா இஸ்திரி பெட்டியை கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினே‌‌ஷ், மாவட்ட வழங்கல் அதிகாரி ஜெயராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story