கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் ரெயில்வே மேம்பால பணிகளைதொடங்கக் கோரி ஆர்ப்பாட்டம்; தி.மு.க. கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்


கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் ரெயில்வே மேம்பால பணிகளைதொடங்கக் கோரி ஆர்ப்பாட்டம்; தி.மு.க. கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 4 Jun 2019 4:30 AM IST (Updated: 4 Jun 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் ரெயில்வே மேம்பால பணிகளை மீண்டு்ம் தொடங்கக் கோரி வருகிற 7-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை,

தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வடகோவையில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. இதற்கு தி.மு.க. மாநகர தெற்கு பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கோவை மாநகராட்சி பகுதி்களில் 10 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் உப்பு நீரும் குறித்த நேரத்தில் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள். கோவை மாநகராட்சி நிர்வாகம் சரியான முறையில் குடிநீர் மேம்பாட்டு பணிகளை செய்யாததால் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே கோவை மாநகர மக்களுக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. அரசு ரூ.23 கோடி ஒதுக்கி உத்தரவிட்டது. ஆனால் மேம்பாலத்துக்கான அணுகு சாலைக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தாமல் கட்டுமான பணிகளை மேற்கொண்டதால் இழப்பீடு தொகை கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதன் காரணமாக அந்த பணிகள் கடந்த 9 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி தீர்வு காணாமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க. ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்ற ஒரே காரணத்துக்காக ரெயில்வே மேம்பால பணிகள் முடங்கி கிடக்கிறது. எனவே மேம்பால பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தி வருகிற 7-ந் தேதி காலை 10 மணிக்கு ரெயில்வே மேம்பாலம் அருகில் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஆ.நந்தகுமார், குப்புசாமி(தி.மு.க.), மயூரா ஜெயக்குமார், கோவை போஸ், ராம நாகராஜ் (காங்.), ஆர்.ஆர்.மோகன்குமார், சேதுபதி (ம.தி.மு.க.), வி.ராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூ.), வி.எஸ்.சுந்தரம் (இந்திய கம்யூ.), தனபால், வடிவேல் (கொ.ம.தே.க.), சுசி கலையரசன் (விடுதலை சிறுத்தைகள்), ரவிக்குமார் (ஆதித் தமிழர் பேரவை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story