சிவகாசி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் மது‘பார்கள்’ வருமான இழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


சிவகாசி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் மது‘பார்கள்’ வருமான இழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 3 Jun 2019 11:06 PM GMT (Updated: 3 Jun 2019 11:06 PM GMT)

சிவகாசி பகுதியில் சில டாஸ்மாக் மது பார்கள் உரிமம் புதுப்பிக்கப்படாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. இதனால் அரசுக்கு வருமானம் வராமல் உள்ளது. இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சிவகாசி,

டாஸ்மாக் மதுக்கடைகளின் அருகிலேயே பார்கள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை பார் கட்டணமாக செலுத்தி உரிமத்தை புதுப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் சிவகாசி பகுதியில் உள்ள பல பார்கள் கடந்த பல மாதங்களாக உரிமங்களை புதுப்பிக்காமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும் அதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. மேலும் இதுபோன்ற பார்களில் 24 மணி நேரமும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிகிறது.

பகல் 12 மணிக்கு பின்னர் தான் மதுக்கடைகள் திறக்க வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் அதற்கு முன்னர் மது அருந்த டாஸ்மாக் கடைகளுக்கு வரும் குடிமகன்களுக்கு பாரில் வாங்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் இரவு 10 மணிக்கு பின்னர் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பின்னரும் பாரில் தான் அதிகஅளவில் மது விற்பனை நடக்கிறது. இதனால் பார் நடத்தும் நபர்களுக்கு கூடுதல் லாபமும் கிடைக்கிறது. ஆனாலும் சிலர் பாருக்கு செலுத்த வேண்டிய உரிம கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

கிராமப்புறங்களில் பல இடங்களில் அனுமதியின்றி பார்களும் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். அனுமதியின்றி மது விற்பனை செய்யும் நபர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டாலும் அந்த நடவடிக்கைகள் கண் துடைப்பாகவே உள்ளது.

சிவகாசி நகர பகுதியில் 10–க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் இருக்கிறது. இந்த பார்களில் 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் தாராளமாக கிடைகிறது. ஆனால் போலீசார் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக தினமும் ஒரு வழக்குப்பதிவு செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்வதாக கணக்கு காட்டுகிறார்கள். இவ்வாறு வழக்குப்பதிவு செய்யும் போது டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள இடம் என்று தான் குறிப்பிடுகிறார்கள். டாஸ்மாக் பார் என்று குறிப்பிடுவது இல்லை. இதனால் அந்த பாரின் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போகிறது.

இனி வரும் காலங்களில் டாஸ்மாக் பாரில் மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த பாரின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் முன்வர வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக மது விற்பனை நடப்பதால் பல இடங்களில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு உரிய அனுமதியின்றி இயங்கும் பார்கள் மீதும், விதி மீறும் பார்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ள வருமான இழப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story