மக்கள் பணிக்காக கட்சி பேதமின்றி துணை நிற்பேன் - சபாநாயகர் சிவக்கொழுந்து உறுதி


மக்கள் பணிக்காக கட்சி பேதமின்றி துணை நிற்பேன் - சபாநாயகர் சிவக்கொழுந்து உறுதி
x
தினத்தந்தி 4 Jun 2019 12:30 AM GMT (Updated: 4 Jun 2019 12:21 AM GMT)

மக்கள் பணிக்காக கட்சி பேதமின்றி துணையாக நிற்பேன் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து உறுதியளித்தார்.

புதுச்சேரி,

புதுவை சபாநாயகராக சிவக்கொழுந்து நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சட்டசபையில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்து பேசினார்கள்.

அதைத்தொடர்ந்து சபா நாயகர் சிவக்கொழுந்து ஏற்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

சபாநாயகராக என்னை போட்டியின்றி தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. சட்டசபைக்கு என்னை அனுப்பி வைத்த லாஸ்பேட்டை தொகுதி மக்களுக்கும் நன்றி. பாரதியாரின் பாடலான மனதில் உறுதி வேண்டும் என்ற பாடல்வரி நின்று புதுவை மக்கள் பயன்பெற பாடுபடுவோம்.

அவ்வையார் கூறியதுபோன்று நாம் அடுத்தவருக்கு உதவி புரிய வேண்டும். நீர் வற்றிய ஆற்றில் கால் வைத்தால் சுடும். ஆனால் அங்கு தோண்டினால் தண்ணீர் சுரக்கும். அதேபோல் நமக்கு இல்லாவிட்டாலும் அடுத்தவருக்கு உதவிட வேண்டும்.

மக்கள் பணிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு கட்சி பேதமின்றி நான் துணை நிற்பேன். சபையின் மாண்புக்கு பங்கம் ஏற்படாமல் கருத்துகளை பதிவு செய்து பணியாற்ற வேண்டும்.

இந்த சட்டமன்றம் பல பெரிய தலைவர்களை சந்தித்துள்ளது. எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களை பெற்றுத்தர தயாராக உள்ளேன். நீங்கள் செய்த உதவியை நான் என்றும் மறவேன்.

இவ்வாறு சபாநாயகர் சிவக்கொழுந்து தனது ஏற்புரையில் கூறினார்.

Next Story