குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாத பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க. எம்.எல்.ஏ. பங்கேற்பு


குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாத பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க. எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 4 Jun 2019 10:15 PM GMT (Updated: 4 Jun 2019 9:13 PM GMT)

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாத பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க. எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் பங்கேற்றார்.

வண்டலூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஆண்டு கடுமையான வறட்சியின் காரணமாக நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்கு நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பேரூராட்சியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையால் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் கடுமையான குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிகாரிகள் தற்காலிக நடவடிக்கை மட்டுமே எடுக்கின்றனர். இதனால் எந்தவித பயனும் ஏற்படவில்லை.

ஆர்ப்பாட்டம்

பேரூராட்சி பகுதியில் நிரந்தரமாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாதது, பேரூராட்சி நிர்வாக சீர்கேடு மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாத செயல் அலுவலரை கண்டித்து தி.மு.க. மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி முன்னாள் தலைவர் எம்.கே.தண்டபாணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் நந்திவரம் கூடுவாஞ்சேரி தி.மு.க. பேரூர் பொறுப்பாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், ஓன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், பேரூராட்சி முன்னாள் தி.மு.க. கவுன்சிலர்கள், தி.மு.க. வார்டு நிர்வாகிகள், கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கியும் அந்த பணிகளை தொடங்குவதற்கு அதிகாரிகள் டெண்டர் விடுவது இல்லை. பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இனியாவது அதிகாரிகள் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story