விளாத்திகுளம் அருகே நின்ற பஸ் மீது கார் மோதியது: வங்கி மேலாளர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி காரில் இருந்த ரூ.45 லட்சத்தை போலீசார் மீட்டனர்


விளாத்திகுளம் அருகே நின்ற பஸ் மீது கார் மோதியது: வங்கி மேலாளர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி காரில் இருந்த ரூ.45 லட்சத்தை போலீசார் மீட்டனர்
x
தினத்தந்தி 4 Jun 2019 11:30 PM GMT (Updated: 4 Jun 2019 10:08 PM GMT)

விளாத்திகுளம் அருகே நின்ற பஸ்சின் பின்னால் கார் மோதிய கோர விபத்தில் வங்கி மேலாளர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். அந்த காரில் இருந்த ரூ.45 லட்சத்தை போலீசார் மீட்டனர்.

விளாத்திகுளம்,

தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் உள்ளது உச்சிநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த அந்தோணிமுத்து மகன் செல்வகணேஷ் (வயது 40) மேலாளராக பணியாற்றி வந்தார். அதே வங்கியில் நாகர்கோவிலை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் நாகராஜ் (42) காவலாளியாக வேலை செய்தார்.

நேற்று காலையில் வங்கி மேலாளர் செல்வகணேஷ், காவலாளி நாகராஜூடன் ஒரு காரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு சென்றார். அங்கு உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் பண பரிவர்த்தனைக்காக ரூ.45 லட்சம் எடுத்தனர். பின்னர் அதே காரில் மீண்டும் உச்சிநத்ததுக்கு வேம்பார், சூரங்குடி வழியாக வந்து கொண்டிருந்தனர். காரை தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்த காசிலிங்கம் மகன் அழகுராஜ் (45) ஓட்டினார்.

விளாத்திகுளம் அருகே வேம்பாரை அடுத்த கீழசண்முகபுரம் நோக்கி கார் வந்து கொண்டிருந்தது. அப்போது வேம்பாரில் இருந்து விளாத்திகுளம் நோக்கி சென்ற அரசு பஸ், கீழ சண்முகபுரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்தது. அங்கு வந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் சாலையோரத்தில் நின்ற அரசு பஸ்சின் பின்னால் பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய செல்வகணேஷ், நாகராஜ், டிரைவர் அழகுராஜ் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் பத்மநாபன்பிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரில் இருந்த ரூ.45 லட்சத்தை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர். இதுதொடர்பாக உச்சிநத்தம் ஸ்டேட் வங்கி கிளைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த கிளையில் இருந்து வந்த அலுவலர்களிடம் பணத்தை போலீசார் ஒப்படைத்தனர். இந்த விபத்து பற்றி சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான செல்வகணேசுக்கு ஜெயா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். காவலாளி நாகராஜூக்கு கிருஷ்ணபிரியா என்ற மனைவியும், 2 மகன்களும், டிரைவர் அழகுராஜாவுக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

Next Story