சிறுமி கற்பழித்து கொலை வழக்கில் தவறான விசாரணை: வாலிபரின் தூக்கு தண்டனை ரத்து ஐகோர்ட்டு தீர்ப்பு


சிறுமி கற்பழித்து கொலை வழக்கில் தவறான விசாரணை: வாலிபரின் தூக்கு தண்டனை ரத்து ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 5 Jun 2019 3:57 AM IST (Updated: 5 Jun 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

சிறுமி கற்பழித்து கொலை வழக்கில் தவறான விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாக கருதிய ஐகோர்ட்டு, வாலிபருக்கு கீழ் கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு கூறியது.

மும்பை,

மும்பை சாக்கிநாக்காவை சேர்ந்த 4 வயது சிறுமி கடந்த 2012-ம் ஆண்டு வில்லேபார்லே குப்பை கிடங்கு அருகே பிணமாக மீட்கப்பட்டாள். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கற்பழித்து கொலை செய்ததாக நஜூர் ஜாவேத் கான் (26) மற்றும் வினோத் மேகர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றத்துக்காக நஜூர் ஜாவேத் கானுக்கு தூக்கு தண்டனை வழங்கியது. ஆதாரங்களை மறைத்த குற்றத்துக்காக வினோத் மேகருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

தூக்கு தண்டனை ரத்து

இந்தநிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அவர்கள் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் தர்மாதிகரி, பி.டி. நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது நீதிபதிகள், பிரேத பரிசோதனை அறிக்கை, மருத்துவ சோதனை அடிப்படையில் சிறுமியின் கற்பழிப்பு மற்றும் கொலை உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்தனர். சிறுமியின் இறப்புக்கு மூச்சுத்திணறல் காரணமாக இருக்கலாம் என்று கூறினர். எனவே குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படாததால் நஜூர் ஜாவேத் கானுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

தவறான விசாரணை

ஆனால் குடோனில் கிடந்த சிறுமியின் உடலை அகற்றி குப்பை கிடங்கு அருகே வீசியதாக வினோத் மேகர் விசாரணையின் போது ஒப்புக்கொண்டார். எனவே ஆதாரங்களை அழிக்க முயன்ற குற்றத்துக்காக வினோத் மேகருக்கு கீழ் கோர்ட்டு விதித்த 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையை உறுதி செய்தனர்.

மேலும் சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். அந்த தொகையை சிறுமியின் கொலை, கற்பழிப்பு வழக்கில் தவறான விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரியிடம் வசூலிக்கவும் உத்தரவிட்டனர்.

Next Story