கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீடு முறையாக கண்காணிக்கப்படாத நிலை; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீடு முறையாக கண்காணிக்கப்படாத நிலை; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 4 Jun 2019 11:27 PM GMT (Updated: 4 Jun 2019 11:27 PM GMT)

கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீடு முறையாக கண்காணிக்கப்படாத நிலையில், இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மத்திய அரசு கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டும் மத்திய அரசு வழங்கி வருகிறது. மேலும் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த கல்வியாண்டுகளில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாத நிலை நீடித்தது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் போதுமான விண்ணப்பங்கள் வரவில்லை என காரணத்தை கூறி நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

நடப்பு கல்வியாண்டில் பல பள்ளிகளில் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த ஏழை, எளிய மாணவர்களிடம் விண்ணப்பங்களை பெற மறுக்கும் நிலையும், விண்ணப்பித்த மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு வலியுறுத்தும் நிலையும் நிலவுகிறது. மத்திய அரசிடம் இருந்து ஏழை மாணவர்களுக்கான கல்வி கட்டணம் தாமதமாக கிடப்பதால் தனியார் பள்ளிகள் இந்த நடைமுறையை பின்பற்றும் நிலை உள்ளது.

இந்த பிரச்சினை குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு கவனத்திற்கு கொண்டு சென்றபோதிலும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த கல்வியாண்டுகளை போல, நடப்பு கல்வியாண்டிலும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளின் கண்காணிப்பு குறைப்பட்டால் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு செய்வதில் இலக்கு எட்டப்படாத நிலை ஏற்படும் என கருதப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம், கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பித்த ஏழை மாணவர்களுக்கு இடம் அளிக்காத பள்ளி நிர்வாகத்தினர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும். மத்திய அரசால் கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டம் என தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் உத்தரவுபடி மாணவர் சேர்க்கையினை கண்காணிக்காமல் இருப்பது ஏற்புடையது அல்ல.


Next Story