மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு; காதல் கணவனுடன் சேர்த்து வைக்கக்கோரி மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்


மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு; காதல் கணவனுடன் சேர்த்து வைக்கக்கோரி மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்
x
தினத்தந்தி 4 Jun 2019 11:45 PM GMT (Updated: 4 Jun 2019 11:40 PM GMT)

காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை மாவட்டம், மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிக்குமார். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 24). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழனிக்குமாரை பொன்னம்மாள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற பழனிக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவரை பற்றிய எந்த தகவலும் பொன்னமாளுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் மேலூர் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், தனது கணவனை அவரது பெற்றோர் மறைத்து வைத்துள்ளதாகவும், எனவே அவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்க்குமாறும் கூறியிருந்தார். இது குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு கையில் பையுடன் பொன்னம்மாள் வந்தார். அவர் கலெக்டரின் கார் நிறுத்தப்பட்ட பகுதிக்கு வந்தபோது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் போலீசார் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது அதில் மண்எண்ணெய் கேன் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில், தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்குமாறு போலீசார் உள்பட பலரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே எனது பிரச்சினைக்கு கலெக்டர் மூலம் தீர்வு காண இங்கு வந்தேன்.

அங்கும் எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்கலாம் என்று வந்ததாக போலீசாரிடம் கூறினார். உடனே போலீசார் அவரை விசாரணைக்காக தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பொன்னம்மாள் மீது போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story