வானவில் : இந்திய சந்தைக்கு வரும் ஸ்மார்ட் கார்


வானவில் : இந்திய சந்தைக்கு வரும் ஸ்மார்ட் கார்
x
தினத்தந்தி 5 Jun 2019 10:37 AM GMT (Updated: 5 Jun 2019 10:37 AM GMT)

சமீபத்தில் அறிமுகமாகியுள்ள ஹூண்டாய் வென்யூ காரில் புளூ லிங்க் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களுக்கும் உங்கள் காருக்குமான இடை வெளி வெகுவாகக் குறைந்து விடும்.

இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இதன் மூலம் தூரத்திலிருந்தே காரை ஆன் செய்வது, ஆப் செய்வது போன்ற இயக்கங்களை மேற்கொள்ள முடியும். கார் திருடு போனால் அது எங்கிருக்கிறது என்பதையும் எளிதில் கண்டறிய முடியும். காரை மேற்கொண்டு நகராமல் நிறுத்த முடியும்.

ஸ்மார்ட்போன் ஆப் (செயலி) மூலம் காரின் ஹாரன், விளக்குகளை தொலை தூரத்திலிருந்தே செயல்படுத்த முடியும். அவசரகால தகவலையும் அனுப்ப முடியும்.

காரின் செயல்பாடுகள், அதன் என்ஜின் நிலை உள்ளிட்டவற்றை உங்கள் ஸ்மார்ட்போனில் பெற முடியும். காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியும். நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைக் கடந்தால் ஸ்பீட் அலெர்ட் எச்சரிக்கை வரும். இலக்கு மாறி பயணித்தால் அதுகுறித்த எச்சரிக்கையும் வரும். கார் நீண்ட நேரம் செயல்படுத்தாமல் நியூட்ரலில் இருந்தால் அது குறித்தும் எச்சரிக்கும்.

காரின் இடத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். சாலையில் வாகன நெரிசல் குறித்த தகவல் உடனடியாக கிடைக்கும். இதன் மூலம் மாற்று வழியில் செல்லலாம். இந்த தொழில்நுட்பம் பிற நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. தற்போதுதான் அது இந்தியாவுக்கு வந்து உள்ளது. குரல் வழி சேவையில் இந்தியர்களின் உச்சரிப்புக்கு ஏற்ப (ஆங்கில உச்சரிப்பு) மாற்றியுள்ளது ஹூண்டாய். காருக்கான இ.சிம். கார்டை வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து வழங்குகிறது ஹூண்டாய். அமேசானுடன் இணைந்து இணையம் சார்ந்த கிளவுட் சேவைகளையும் அளிக்கிறது.

குடும்பத்தினர் காரை எடுத்துச் சென்றால் வாகனம் செல்லும் திசை, செயல்பாடுகளை அனைவருமே அறிந்து கொள்ளும் வகையில் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

புதிய கார்களில் இத்தகைய புளூ லிங்க் வசதியை 3 ஆண்டுகளுக்கு இலவசமாக அளிக்கிறது ஹூண்டாய். அதன் பிறகு இந்த சேவை உங்களுக்குத் தேவைப்பட்டால் அப்போது விதிக்கப்படும் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். கார் நேவிகேஷன் சிஸ்டம் அல்லது ஸ்மார்ட்போன் ஆப் (செயலி) மூலம் புளூ லிங்க் சேவையைப் பெறலாம். ஏற்கனவே வாங்கிய காரிலும் இத்தகைய இணைப்பு வசதியை பெறலாம். வாகனத்துக்கு வாரண்டி இருந்தால் பழைய காராக (செகன்ட் ஹேண்ட்) இருந்தாலும் இத்தகைய சேவையை அளிக்கிறது.

Next Story