லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டதாக புகார்: திருவெறும்பூர் தாசில்தார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் கலெக்டர் நடவடிக்கை


லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டதாக புகார்: திருவெறும்பூர் தாசில்தார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Jun 2019 11:00 PM GMT (Updated: 16 Jun 2019 7:36 PM GMT)

லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து திருவெறும்பூர் தாசில்தாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

திருவெறும்பூர்,

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் தமிழகத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தமிழக அரசு மணல் குவாரி அமைக்கவில்லை. இதனால் மணல் தட்டுப்பாடு பெரிய அளவில் ஏற்பட்டு, கட்டிட தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் சிலர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நள்ளிரவு நேரங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல்களை லாரியில் அள்ளி கடத்தி வருகிறார்கள். ஆனால், வருவாய்த்துறையினர் கண்துடைப்புக்காக ஒரு சிலரை மட்டும் பிடித்து போலீசில் ஒப்படைக்கிறார்கள்.

அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து வருகிறார்கள். மற்றவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு விட்டுவிடுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் கொள்ளை பெரிய அளவில் நடப்பதாகவும், வருவாய்த்துறையினரும், போலீசாரும் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் காவிரி ஆற்றில் மணல் அள்ளிச்செல்லும் லாரி உரிமையாளரிடம் திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாத்துரை ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாத்துரையை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக ரபீக் அகமது திருவெறும்பூர் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story