தேவாரம் பகுதியில் மனிதர்களை கொல்லும், யானையிடம் இருந்து தப்பிக்க துப்பாக்கி வழங்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கொந்தளிப்பு


தேவாரம் பகுதியில் மனிதர்களை கொல்லும், யானையிடம் இருந்து தப்பிக்க துப்பாக்கி வழங்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கொந்தளிப்பு
x
தினத்தந்தி 22 Jun 2019 3:45 AM IST (Updated: 22 Jun 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

தேவாரம் பகுதியில் விவசாயிகளை கொல்லும் ஒற்றை காட்டு யானையிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் கவுதம், மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லே ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கலந்துகொண்டு பல்வேறு குறைகள், கோரிக்கைகளை தெரிவித்தனர்.

இதையடுத்து விவசாயிகள் பேசும் போது கூறியதாவது:-

மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு ஆறுகளில் கூடுதல் தடுப்பணைகள் கட்ட வேண்டும். நீர்நிலைகளை தூர்வார வேண்டும். கண்மாய்களை பொதுப்பணித்துறையினர் தூர்வாருவது இல்லை. தன்னார்வலர்கள் தூர்வார அனுமதி கேட்டாலும் பொதுப்பணித்துறையினர் அனுமதி கொடுப்பது இல்லை.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். முல்லைப்பெரியாற்றில் இருந்து ஆண்டிப்பட்டி பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தில் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லாமல் கால்வாய் வெட்டி அதன் வழியாக தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் நிலத்தடி நீர்மட்டம் பெருகுவதோடு, கிணற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

துப்பாக்கி வேண்டும்

தேவாரம் பகுதியில் ஒற்றைக் காட்டு யானையால் விவசாயிகள் கடந்த 3 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் இந்த யானையால் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகளின் நலன் கருதி அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அப்புறப்படுத்த வேண்டும். வனத்துறையினர் எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது இல்லை. எனவே, விவசாயிகளை கொண்ட பயிர் பாதுகாப்பு குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவில் உள்ள விவசாயிகளின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும். கேரளாவில் காட்டு யானை தாக்கி பலியானால் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால், இங்கு ரூ.3 லட்சம் தான். அதை பெறுவதிலும் பல்வேறு இடையூறுகள் உள்ளன. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து கலெக்டர் பேசுகையில், ‘காட்டு யானையிடம் இருந்து விவசாயிகளுக்கும், விவசாய பயிர்களுக்கும் பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். நீர்நிலைகளை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆண்டிப்பட்டி பகுதிகளுக்கு முல்லைப்பெரியாற்று தண்ணீர் கொண்டு செல்வது குறித்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

கூட்டத்தில் காட்டு யானை பிரச்சினை குறித்த மாவட்ட வன அலுவலர் கவுதம் பேசுகையில், ‘தேவாரம் பகுதியில் காட்டு யானையை அப்புறப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சினை குறித்து அரசுக்கு விரிவான அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்பேரில் ரூ.1 கோடி மதிப்பில் 3 அடுக்கு பாதுகாப்பு வேலி அமைத்தல், அகழி வெட்டுதல், யானையின் நடமாட்டத்தை கண்காணித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும் வகையில் கண்காணிப்பு கோபுரம் ஆகியவை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டே இதற்கான பணிகள் நடக்கும்’ என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜவஹரிபாய் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

Next Story