கொடிவேரி அணையில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு
கொடிவேரி அணையில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடத்தூர்,
கோபி அருகே பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தடுக்கப்பட்டு, தடப்பள்ளி–அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் கொடிவேரி அணையில் இருந்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு 75–க்கும் மேற்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் மூலம் தினந்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் கொடிவேரி அணையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் அணையில் இருந்து கூடுதலாக 2 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டால் பாசனம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டினார்கள். மேலும் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை செயல்படுத்தக்கூடாது என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடிவேரி அணையை விவசாயிகள் முற்றுகையிட்டார்கள்.
இந்தநிலையில் கொடிவேரி அணையில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை கோவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சீனிவாசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கு கட்டப்பட்டு வரும் குடிநீர் தொட்டிகளை பார்வையிட்டார். மேலும், தடப்பள்ளி, நீருந்து நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். அப்போது அவருடன் குடிநீர் வடிகால்வாரிய மேற்பார்வை பொறியாளர் உதய்சிங், துணை நிலநீரியல் ஆய்வாளர் மணி உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.