குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்


குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2019 9:45 PM GMT (Updated: 24 Jun 2019 8:33 PM GMT)

திருச்செந்தூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு 1,300 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. அவற்றில் 272 குடிநீர் இணைப்புகளுக்கு ஆத்தூர் பகுதியில் இருந்து தாமிரபரணி ஆற்று குடிநீர் வழங்கப்படுகிறது. மற்ற குடிநீர் இணைப்புகளுக்கு திருச்செந்தூர் அருகே நத்தைகுளம் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, அங்கிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.

தற்போது நத்தைகுளம் தண்ணீரின்றி வறண்டதால், அங்கிருந்து பெறப்படும் குடிநீர் உப்புத்தன்மை அதிகரித்து காணப்படுகிறது. அந்த தண்ணீரை குடிக்க பயன்படுத்த முடியாததால், வீரபாண்டியன்பட்டினத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

எனவே வீரபாண்டியன்பட்டினத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்தும், அனைத்து வீடுகளுக்கும் தாமிரபரணி ஆற்று குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், வீரபாண்டியன்பட்டினம் கிறிஸ்தவ ஆலயம் அருகில் பொதுமக்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரென்ஸ்லின் ரொட்ரிகோ தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஆல்வின் ரொட்ரிகோ உள்பட திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

Next Story