தெப்பக்காடு முகாமில், வளர்ப்பு யானை மசினியின் உடல்நிலையில் முன்னேற்றம் - முதுமலை வனத்துறை தகவல்


தெப்பக்காடு முகாமில், வளர்ப்பு யானை மசினியின் உடல்நிலையில் முன்னேற்றம் - முதுமலை வனத்துறை தகவல்
x
தினத்தந்தி 25 Jun 2019 10:15 PM GMT (Updated: 25 Jun 2019 9:33 PM GMT)

தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை மசினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக முதுமலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கூடலூர்,

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காட்டில் 24 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தல், வனத்தில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை வனத்துறையினர் பிடித்து வளர்த்து வருகின்றனர். கடந்த 2006-ம் ஆண்டு முதுமலை கார்குடி வனத்தில் தாயை பிரிந்து தவித்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு மசினி என பெயரிட்டு தெப்பக்காடு முகாமில் வைத்து பாகன்களின் உதவியுடன் வளர்த்து வந்தனர்.

அனைவரிடத்திலும் செல்லப்பிள்ளையாக பழகி வந்த மசினி குட்டி யானை கடந்த 2015-ம் ஆண்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் 2018-ம் ஆண்டு கோவிலில் நின்றிருந்த மசினி திடீரென பாகனை தாக்கி கொன்றது. மேலும் யானையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையொட்டி நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த ஜனவரி மாதம் மசினி யானை முதுமலைக்கு கொண்டு வரப்பட்டு தெப்பக்காடு முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் பாகன்கள் மசினி யானையை பராமரித்து வருகின்றனர்.

மேலும் அதன் உடல் நிலை குறித்து மாதந்தோறும் அறிக்கை தயாரித்து வருகின்றனர். இதற்காக மசினி யானையின் உடல் எடை உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வைக்கின்றனர். கடந்த மாதம் மசினி யானையின் உடல் எடை மாதம் 2,360 கிலோ இருந்தது. நேற்று பகல் 1 மணிக்கு கூடலூர் தொரப்பள்ளியில் உள்ள வனத்துறை எடை மையத்தில் மசினி யானை கொண்டு வரப்பட்டது.

பின்னர் அதன் எடை கணக்கீடப்பட்டது. அப்போது 2,400 கிலோ இருந்தது. பின்னர் முதுமலைக்கு அழைத்து செல்லப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, மசினி யானை கடந்த மாதத்தை விட 40 கிலோ எடை கூடி உள்ளது. சமயபுரத்தில் இருந்து முதுமலைக்கு வந்த மசினி யானையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Next Story