மதுரை அருகே பரபரப்பு, கோவில் வளாகத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர் - காதல் கைகூடாததால் தற்கொலையா? போலீசார் விசாரணை


மதுரை அருகே பரபரப்பு, கோவில் வளாகத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர் - காதல் கைகூடாததால் தற்கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 Jun 2019 10:30 PM GMT (Updated: 27 Jun 2019 9:47 PM GMT)

கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கில் வாலிபர் பிணம் தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. காதல் கைகூடாததால் அவர் தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமங்கலம், 

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைமணி. அவருடைய மகன் சின்னகருப்பு (வயது 23). கொத்தனாராக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் சின்னகருப்பு நேற்று அப்பகுதியில் ஒரு கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சின்னகருப்புவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்குள்ள சுவரில், “காதலி என்னை ஏமாற்றினார், காதலித்தவர்களையும் ஏமாற்றாதீர்கள், காதலிப்பவர்களையும் ஏமாற்றாதீர்கள்” என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. எனவே காதல் விவகாரத்தில் சின்னகருப்பு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-

தற்கொலை செய்துகொண்ட சின்னகருப்புவும், அப்பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஓராண்டிற்கு முன்பு அந்த மாணவிக்கு 18 வயது பூர்த்தியடையாத நிலையில் சின்னகருப்பு, அவரை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என பேசி சமரசம் செய்து மாணவியை பெற்றோருடன் போலீசார் அனுப்பிவைத்தனர். இதற்கிடையேதான் அந்த மாணவி பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்தார்.

இந்தநிலையில் சின்னகருப்பு, 18 வயது முடிந்ததால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று மாணவியிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அந்த மாணவியும், அவரது பெற்றோரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதனால் சின்ன கருப்பு மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் தான் அவர் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக சின்னகருப்புவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story