திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: மலையில் இருந்து குதித்த காதல் ஜோடியின் கால்கள் முறிந்தன ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: மலையில் இருந்து குதித்த காதல் ஜோடியின் கால்கள் முறிந்தன ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 28 Jun 2019 3:45 AM IST (Updated: 28 Jun 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மலையில் இருந்து குதித்த காதல் ஜோடியின் கால்கள் முறிந்தன. இதைதொடர்ந்து இருவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராமநகர்,

பெங்களூரு அருகே ஆவலஹள்ளியை சேர்ந்தவர் ராகேஷ். பெங்களூரு ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வருபவர் ஐஸ்வர்யா. இவர்கள் 2 பேருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ராகேசும், ஜஸ்வர்யாவும் காதலிக்க தொடங்கினார்கள். இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது.

ஆனால் ராகேஷ், ஐஸ்வர்யாவின் காதலை 2 பேரின் பெற்றோரும் ஏற்றுக் கொள்ளாமல் திருமணத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராகேசும், ஐஸ்வர்யாவும் மனம் உடைந்தார்கள். மேலும் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.

மலையில் இருந்து குதித்தனர்

அதன்படி நேற்று முன்தினம் மாலையில் ராமநகர் (மாவட்டம்) புறநகரில் உள்ள மலைப்பகுதிக்கு வந்தனர். பின்னர் மலை மீது ஏறிய ராகேசும், ஐஸ்வர்யாவும் திடீரென்று கீழே குதித்தனர். அந்த சந்தர்ப்பத்தில் மலையின் அடிவாரத்தில் இருந்த மரத்தின் கிளைகளில் 2 பேரும் விழுந்ததாக தெரிகிறது. இதனால் ராகேஷ், ஐஸ்வர்யாவின் கால்கள் முறிந்ததுடன், பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.

இதை பார்த்து அப்பகுதியில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 2 பேரையும் மீட்டு ராமநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு ராகேஷ், ஐஸ்வர்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை என்றும், 2 பேரின் கால்கள் மட்டும் முறிந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பு

போலீஸ் விசாரணையில், திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மலையில் இருந்து கீழே குதித்து 2 பேரும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து ராமநகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story