வளர்ச்சி பணிகளை செய்வது நாங்கள், ஓட்டு மட்டும் பா.ஜனதாவுக்கா? சித்தராமையா கேள்வி


வளர்ச்சி பணிகளை செய்வது நாங்கள், ஓட்டு மட்டும் பா.ஜனதாவுக்கா? சித்தராமையா கேள்வி
x
தினத்தந்தி 27 Jun 2019 10:33 PM GMT (Updated: 27 Jun 2019 10:33 PM GMT)

வளர்ச்சி பணிகளை செய்வது நாங்கள், ஓட்டு மட்டும் பா.ஜனதாவுக்கா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகல்கோட்டை,

முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் ராய்ச்சூர் மாவட்டத்தில் கிராம தரினம் நிகழ்ச்சி நடத்தினார். இதற்காக ராய்ச்சூரில் இருந்து அவர் பஸ்சில் கரேகுட்டா கிராமத்திற்கு சென்றார். அவர் வந்த பஸ்சை மின் உற்பத்தி நிலையை ஊழியர்கள் வழிமறித்து போராட்டம் நடத்தினர். குமாரசாமி அவர்களை பார்த்து, ஓட்டு மட்டும் பா.ஜனதாவுக்கு போடுகிறீர்கள், பிரச்சினைகளை எங்களிடம் வந்து சொல்கிறீர்கள் என்று கடும் கோபத்துடன் பேசினார். இதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பு தலைவருமான சித்தராமையா, வளர்ச்சி பணிகளை செய்வது நாங்கள், ஓட்டு பா.ஜனதாவுக்கா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புரிந்துகொள்ள முடியவில்லை

அதாவது பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகாவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், பாதாமி தொகுதி எம்.எல்.ஏ.வுமான சித்தராமையா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினேன். ஆனால் நீங்கள் ஏன் பா.ஜனதாவுக்கு ஓட்டு போடுகிறீர்கள் என்பது தெரியவில்லை. நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. வளர்ச்சி பணிகளை செய்வது நாங்கள். வெறும் பேச்சு, கோஷங்களால் வளர்ச்சி ஏற்படாது.

ஓட்டு பா.ஜனதாவுக்கா?

உண்மை நிலையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் பாதாமி தொகுதியில் பா.ஜனதா காங்கிரசை விட 9 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக பெற்றுள்ளது. பிரதமர் மோடி இந்த தொகுதியில் என்ன வேலை செய்துள்ளார் என்பதற்காக நீங்கள் ஓட்டு போட்டீர்கள்.

வளர்ச்சி பணிகளை செய்வது நாங்கள், ஆனால் ஓட்டு மட்டும் பா.ஜனதாவுக்கா?. பாதாமி தொகுதிக்கு 8,300 வீடுகள் கட்ட அனுமதி கிடைத்துள்ளது. தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து வீடுகள் கட்டி தரப்படும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

சித்தராமையாவின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.

Next Story