குடிநீரை திருட பயன்படுத்திய 34 மோட்டார்கள் பறிமுதல்
ராமேசுவரம் பகுதியில் குடிநீரை திருட பயன்படுத்திய 34 மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரம்,
தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து நகராட்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. ராமேசுவரம் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் திருடப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து ராமேசுவரம் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், பொறியாளர் அய்யனார், சரவணன் மற்றும் பணியாளர்கள் நகராட்சி பகுதி முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடிநீரை திருட குழாய் இணைப்புகளில் பொருத்தப்பட்டிருந்த 34 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஆணையாளர் வீரமுத்துக்குமார் கூறியதாவது:- பருவமழை பொய்த்துப்போனதால் குடிநீர் பற்றாக்குறை அனைத்து பகுதிகளிலும் நிலவி வருகிறது. இருப்பினும் ராமேசுவரம் பகுதியில் குடிநீர் வினியோகம் சீராக நடைபெற்று வருகிறது. முறைகேடாக குடிநீர் இணைப்புகளில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதி முழுவதும் தொடர்ந்து சோதனை நடத்தப்படும்.
குடிநீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story