சேலத்தில் கட்டையால் அடித்து தொழிலாளி கொலை உறவினருக்கு போலீசார் வலைவீச்சு


சேலத்தில் கட்டையால் அடித்து தொழிலாளி கொலை உறவினருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Jun 2019 10:45 PM GMT (Updated: 28 Jun 2019 3:43 PM GMT)

சேலத்தில் கட்டையால் அடித்து தொழிலாளியை கொலை செய்த உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்..

கொண்டலாம்பட்டி, 

சேலம் நடுவனேரி அருகே உள்ள வேம்படிதாளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). அதே பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (45). இருவரும் கூலித் தொழிலாளர்கள். மேலும் இருவரும் உறவினர்கள் ஆவார்கள். குடும்ப பிரச்சினையால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் மாரியப்பன் வேம்படிதாளம் பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் முத்துசாமி குடிபோதையில் சென்று உள்ளார். மாரியப்பனை பார்த்ததும், முத்துசாமிக்கு பழைய பகை ஞாபகம் வந்து உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துசாமி, தருவில் கிடந்த கட்டையை எடுத்து மாரியப்பனின் தலையில் ஓங்கி அடித்து உள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த முத்துசாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மாரியப்பனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முத்துசாமியை தேடி வருகின்றனர்.


Next Story