மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்திய பொதுமக்கள்


மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்திய பொதுமக்கள்
x
தினத்தந்தி 28 Jun 2019 9:45 PM GMT (Updated: 28 Jun 2019 4:43 PM GMT)

கவசம்பட்டு ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்திய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியாத்தம், 

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கவசம்பட்டு பாலாற்று பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி மணல்குவாரி செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து 25-ந் தேதி காலை 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கவசம்பட்டு பாலாற்று பகுதியில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மணல் குவாரி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை மணல் குவாரிக்கு அதிகாரிகள் வருவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர். மேலும் கே.வி.குப்பம் பகுதியில் இன்ஸ்பெக்டர்கள் இருதயராஜ், கவிதா உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் அதிகாரிகள் யாரும் மணல் குவாரி பகுதிக்கு வரவில்லை.

அதைத்தொடர்ந்து கவசம்பட்டு ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்றனர். கிராம சபை கூட்டத்தில் அரசு மணல் குவாரி அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் மணல் குவாரியை திறக்க கூடாது என்ற பொதுமக்களின் கோரிக்கை மீது மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story