ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று கூறி திருவோடு ஏந்தி விவசாயிகள் போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று கூறி திருவோடு ஏந்தி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2019 10:15 PM GMT (Updated: 28 Jun 2019 6:45 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திருவோடு ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி, 

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 10 மணி முதல் விவசாயிகள் வந்து கொண்டே இருந்தனர். அப்போது காலை 10.30 மணிக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பூ.விசுவநாதன் தலைமையில் விவசாயிகள் தலையில் துண்டு போட்டும், கையில் திருவோடு ஏந்தியும் ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக வரவேற்பு ஹால் முன்பு கையில் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று கோஷம் எழுப்பினார்கள்.

பின்னர், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்த கலெக்டர் சிவராசுவிடம் கையில் திருவோடுடன் சென்று விவசாயிகள் முறையிட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை திருவாரூர், நாகை மாவட்டத்தில் செயல்படுத்தி வந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல், கதிராமங்கலம் ஆகிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டு விவசாயிகளும், மக்களும் போராடிய நிலையில் அத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கலாம் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதையறிந்து தமிழக விவசாயிகளும், மக்களும் கொதித்தெழுந்து உள்ளனர். எனவே, இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கக்கூடாது. மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுபோல உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. பின்னர் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் பூ.விசுவநாதன் கூறியதாவது:-

டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதினால்தான், காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் சூழல் அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கருதுகிறார்கள். மத்திய அரசு தமிழகத்தின் வாழ்வாதரத்தையும், விவசாயத்தையும் அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க முடிவெடுத்துள்ளது. சட்டமன்றம் 2 நாட்களில் கூட உள்ளது. அப்போது தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என தமிழக முதல்-அமைச்சர் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம். அதே வேளையில் எங்களுக்காக மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் குரல் கொடுக்கவும், வீதியில் இறங்கி போராடவும் வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story