அரசு கல்லூரியில் கூடுதல் இடங்களை பெற்ற பிறகே சென்டாக் தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


அரசு கல்லூரியில் கூடுதல் இடங்களை பெற்ற பிறகே சென்டாக் தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் அன்பழகன் எம்.எல்.ஏ.  வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Jun 2019 9:45 PM GMT (Updated: 28 Jun 2019 8:46 PM GMT)

புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் கூடுதல் இடங்களை பெற்ற பின்னரே சென்டாக் தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசானது மருத்துவக்கல்லூரி சேர்க்கையில் தொடர்ந்து மாணவர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. நீட் தேர்வுக்கு முன்பு அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் 50 சதவீதம் அடிப்படையில் 550 இடங்களை பெறவேண்டிய அரசு 280 இடங்களை பெற்றுக்கொண்டு 270 இடங்களை பறிகொடுத்தது. மத்திய அரசு நீட் தேர்வினை கொண்டுவந்த பிறகு நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அரசுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை நிராகரித்துவிட்டன.

புதுவையில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தவிர்த்து பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா ஆகிய மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் உள்ள 450 இடங்களில் 225 இடங்களை பெறவேண்டிய அரசானது 170 இடங்களை மட்டும் பெறுவது முறைகேடான செயலாகும். ஆண்டுக்கு 55 இடங்கள் குறைவாக பெறுவதால் அந்த இடங்கள் கல்லூரி நிர்வாகத்தால் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் ஆட்சியாளர்கள் முறைகேடாக நடக்கிறார்கள்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டால் நம் மாநில அரசு கல்லூரியில் 37 இடங்களை கூடுதலாக பெறும் வாய்ப்பினை புதுச்சேரி அரசு காலத்தோடு செய்யவில்லை. இதனால் நமக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கவில்லை. தற்போது மத்திய அரசு இதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளதால் அரசு மருத்துவ கல்லூரிக்கு 37 இடங்கள் கூடுதலாக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 37 இடங்களை பெற்று சென்டாக் தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும்.

சென்டாக் தரவரிசை பட்டியலை வெளியிட்டு அதன்பிறகு அரசு கல்லூரியில் இடம் அளிக்கப்படும்போது மாணவர்கள் மத்தியில் வீண் குழப்பம் ஏற்படும். எனவே மத்திய அரசின் பொருளாதார பின்தங்கியோர்களுக்கான திட்டத்தில் கிடைக்கும் இடங்களை பெற்ற பின்னரே சென்டாக் தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story