குட்டை போல் மாறிய காமராஜர் அணை, திண்டுக்கல்லுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்


குட்டை போல் மாறிய காமராஜர் அணை, திண்டுக்கல்லுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
x
தினத்தந்தி 29 Jun 2019 4:15 AM IST (Updated: 29 Jun 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் காமராஜர் அணை வறண்டு குட்டை போல் மாறி விட்டது. இதனால் திண்டுக்கல்லுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

முருகபவனம்,

திண்டுக்கல் நகருக்கு ஆத்தூர் காமராஜர் அணை மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்களின் மூலம் நாள்தோறும் சுமார் 15 எம்.எல்.டி (ஒரு எம்.எல்.டி என்பது 10 லட்சம் லிட்டர்) குடிநீர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. காமராஜர் அணை வறண்டு குட்டை போல் தற்போது காட்சியளிக்கிறது. அங்கு தேங்கி கிடக்கும் தண்ணீரை மின் மோட்டார் மூலம் ஏற்றி வினியோகம் செய்து வருகின்றனர். திண்டுக்கல் நகருக்கு இன்னும் ஒரு மாதத்துக்கு குடிநீரை வினியோகம் செய்யலாம். அதன்பிறகு அணை முற்றிலும் வறண்டு விடும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

திண்டுக்கல் நகரின் தண்ணீர் பஞ்சத்தை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீர் ஓரளவு தீர்த்து வருகிறது. இருப்பினும் அதனை முற்றிலும் நம்ப முடியாத சூழ்நிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேரணை திட்டத்தின் மூலம் நாள்தோறும் சுமார் 5 எம்.எல்.டி. குடிநீர் பெறப்பட்டு வந்தது.

வைகை ஆறு வறண்டு போனதால் இத்திட்டத்தின் மூலம் தண்ணீர் பெற முடியவில்லை. அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டது. இதனால் மின் மோட்டார், குழாய்கள் சேதமடைந்தன. இத்திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தால் வைகை ஆற்றில் தண்ணீர் ஓடும் போது நாள்தோறும் 5 எம்.எல்.டி. தண்ணீரை மீண்டும் பெறலாம்.

மதுரைக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் பெற 2 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. 3-வது திட்டமாக உலக வங்கியின் உதவியோடு முல்லை பெரியாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல் திண்டுக்கல்லில் 3-வது குடிநீர் திட்டம் ஒன்றை செயல்படுத்த வேண்டும்.

ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை மருதாநதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் உபரிநீரை குழாய்கள் மூலம் ஆத்தூர் அணைக்கு கொண்டு வரலாம். திண்டுக்கல்லின் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை இதன் மூலம் தவிர்த்து விடலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story