மழை அளவு குறைந்துவிட்டதால், தண்ணீரை சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் - பொதுமக்களுக்கு, கலெக்டர் வேண்டுகோள்


மழை அளவு குறைந்துவிட்டதால், தண்ணீரை சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் - பொதுமக்களுக்கு, கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 Jun 2019 10:45 PM GMT (Updated: 29 Jun 2019 12:23 AM GMT)

மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்துவிட்டது. எனவே நீரின் தேவையை உணர்ந்து அவற்றை சேமிக்கும் பழக்கத்தை பொதுமக்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர்,

நாடாளுமன்றதேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் கடந்த மே 1-ந்தேதியன்று நடக்க இருந்த கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து (ஜூன்) 28-ந்தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தமிழக ஊரக வளர்ச்சி துறை அறிவித்து இருந்தது.

அதன்படி, கடலூர் மாவட்டத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கடலூர் ஒன்றியம், உச்சிமேடு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அன்புசெல்வன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் கல்வி பெற்றால் அந்த குடும்பம் முன்னேறுவதுடன் அந்த சமுதாயமே முன்னேற்றமடையும். பெண்களின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றமாகும். நமது அரசு கிராமப்புற மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே முழுமையாக நிறைவேற்ற முடியும்.

நமது மாவட்டத்தில் கடந்த காலத்தை காட்டிலும் மழையின் அளவு தற்போது குறைந்துள்ளது. எனவே கிடைக்கிற நீரை மிக சிக்கனமாக பயன்படுத்துவதுடன் அவற்றை சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இளைய சமுதாயத்திற்கும் நீரின் தேவையை உணர்த்தி அவர்களுக்கும் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திட வேண்டும். மாவட்டத்தில் 792 ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஏரி, குளங்களில் நாம் கூடுதல் நீரை சேமிப்பதுடன் வண்டல் மண் விவசாய பெருமக்களுக்கு கிடைக்கப்பெற்று பயன்பெறுவார்கள்.

மக்களுக்கும், சுற்றுபுறத்திற்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்திட வேண்டும்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்ட உதவி தொகை தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கிடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக நாளை(அதாவது இன்று) மற்றும் 30-ந்தேதி(அதாவது நாளை) ஆகிய நாட்களில் வருவாய் கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதற்காக அடங்கல் சான்றை விவசாயிகள் அனைவரும், தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள இ-அடங்கல் என்ற செல்போன் செயலியை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயலியின் மூலம் தங்கள் நிலத்தில் எந்த பயிரை பயிரிட்டுள்ளோம் என்று பூர்த்தி செய்து அடங்கல் சான்றை பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஆனந்தன், கடலூர் தாசில்தார் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுப்ரமணியன் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அண்ணாகிராம ஒன்றியம் பண்டரக்கோட்டை ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில், குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில் பொதுமக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டது. மேலும் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஆதிமூலம் நன்றி கூறினார்.

Next Story