பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம், 9-ந் தேதி சிறப்பு முகாம்


பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம், 9-ந் தேதி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 5 July 2019 11:00 PM GMT (Updated: 5 July 2019 5:46 PM GMT)

பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட விவசாயிகள் ரூ.6 ஆயிரம் பெற விண்ணப்பிக்க வருகிற 9-ந் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர், 

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு- குறு விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.6 ஆயிரம் நிதிஉதவி வழங்கும் திட்டத்தில், தற்போது 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் நிதிஉதவி வழங்கும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் உயர் வருவாய் பிரிவினர் மற்றும் நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்களை தவிர பிற விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் சேர்வதற்கு உடனடியாக கிராம நிர்வாக அதிகாரியிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் தொடர்ச்சியாக வருவாய்த்துறை, வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. மேலும் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுகளுக்கும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே இதுவரையில் தங்களது தாய் மற்றும் தந்தை பெயரில் நிலங்கள் இருக்கும் விவசாயிகள், அதற்குரிய வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட பகுதியின் தாசில்தாரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து வருகிற 9-ந் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து இத்திட்டத்தில் பயன் பெறலாம். மேலும் மாவட்டத்தில் இதற்கென சிறப்பு முகாம் வருகிற 9-ந்தேதி அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், அனைத்து கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. மேற்கண்ட நிதி உதவியினை பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் தங்களது ஆதார் எண், வங்கி கணக்கு பாஸ் புத்தகம், பட்டா சிட்டா நகல், ரேஷன் கார்டு நகல், மொபைல் எண் ஆகியவற்றை உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் இணைத்து ஒப்படைக்க வேண்டும். எனவே, மேற்கண்ட திட்டத்தில் நிதி உதவி பெற விவசாயிகள் சிறப்பு முகாமில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story