69 கண்மாய்களில் குடிமராமத்து பணி; கலெக்டர் தகவல்


69 கண்மாய்களில் குடிமராமத்து பணி; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 5 July 2019 11:00 PM GMT (Updated: 5 July 2019 10:03 PM GMT)

திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள கண்மாய் குடிமராமத்து பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆர்.எஸ்.மங்கலம்,

குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37 கோடியே 59 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக பரமக்குடி கீழ்வைகை வடிநில கோட்டம் கட்டுப்பாட்டில் பரமக்குடி, ராமநாதபுரம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் முதுகுளத்தூர் வட்டங்களில் உள்ள 41 கண்மாய்களிலும், மதுரை குண்டாறு வடிநில கோட்டம் கட்டுப்பாட்டில் முதுகுளத்தூர், கடலாடி மற்றும் கமுதி வட்டங்களில் உள்ள 28 கண்மாய்களிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிலையில் திருவாடானை தாலுகாவுக்கு உட்பட்ட குருமிலாங்குடி, வட்டாணம் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட ஏ.ஆர்.மங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரிடையாக சென்று குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள கண்மாய்களை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் 69 கண்மாய்களில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கண்மாய்களின் கரைகளை பலப்படுத்துதல், மடைகள், கலுங்குகளை சீரமைத்தல் மற்றும் மறுகட்டுமானம் செய்தல், வரத்துக்கால்வாய்களை புனரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த குடிமராமத்து திட்டப்பணிகளுக்கு அரசின் பங்களிப்பாக 90 சதவீத தொகையும், அப்பகுதி விவசாய குழுக்களின் பங்களிப்பாக 10 சதவீத தொகையுடன் இப் பணிகள் பதிவு பெற்ற விவசாய சங்கங்கள் மூலம் நியமன முறையில் செயல்படுத்தப்படும். இவ்வாறு மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் தரமான முறையில் வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊரகப்பகுதிகளில் அதிகஅளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். அதேபோல மழைநீரை சேகரிக்கு வகையில் அதிக அளவில் பண்ணைக் குட்டைகள் அமைக்கவும் தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தவும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கிடகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள், கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.

Next Story