மதுரை அருகே கட்டுமான பணியின் போது அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து தொழிலாளி பலி, 5 பேர் மீட்பு


மதுரை அருகே கட்டுமான பணியின் போது அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து தொழிலாளி பலி, 5 பேர் மீட்பு
x
தினத்தந்தி 6 July 2019 12:00 AM GMT (Updated: 5 July 2019 10:42 PM GMT)

புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், 2 பேர் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

செக்கானூரணி,

மதுரை மாவட்டம் செக்கானூரணி ஆ.கொக்குளத்தைச் சேர்ந்தவர் மாதவன். கட்டிட காண்டிராக்டரான இவர், செக்கானூரணியில் அரசு பள்ளியின் பின்புறம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறார். 3 தளத்தைக் கொண்ட இந்த குடியிருப்பின் கட்டுமானப்பணி நடைபெற்று வந்தது.

நேற்று தரைத்தளத்தில் எலக்ட்ரிக்கல் மற்றும் சிமெண்டு பூச்சு வேலைகள் நடைபெற்றன. இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் திடீரென கட்டிடத்தின் 2 மேல்தளங்கள் இடிந்து விழுந்தன.

இதில் தரைதளத்தில் மொத்தமாக கட்டிட இடிபாடுகள் வந்து விழுந்தன. அங்கு வேலை செய்து கொண்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களது அலறல் சத்தம் அருகில் உள்ளவர்களை பதைபதைக்க வைத்தது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு பெரியார், சோழவந்தான், வாடிப்பட்டி, உசிலம்பட்டியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி பகுதிகளை சேர்ந்த 108 ஆம்புலன்சுகளும் சம்பவ இடத்திற்கு வந்தன. உசிலம்பட்டி, செக்கானூரணி போலீசாரும் விரைந்து வந்தனர்.

3 தளங்கள் கொண்ட இந்த கட்டிடத்தில் எத்தனை தொழிலாளர்கள் வேலை பார்த்தார்கள் என்பது குறித்த தகவல் கிடைக்காததால், தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன. தரை தளத்திற்கு அருகே ராஜேஷ் (வயது 30), முருகன்(36), ஆதவன் முனியாண்டி ஆகியோர் லேசான காயங்களுடன் இடிபாடுகளுக்குள் கிடந்தனர். அவர்களை கண்ட தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர்களுடன் சேர்த்து 8 பேர் வேலை செய்த தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மற்ற 5 தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்றது. சற்று நேரத்தில் தலையில் பலத்த காயங்களுடன் கார்த்திக் (28) மீட்கப்பட்டார். இவரும் ஆம்புலன்ஸ் மூலம் பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், காசிநாதன்(45) என்பவர் மீட்கப்பட்டார். ஆனால், ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதனால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவித்த முத்துபாண்டி என்பவரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். இருப்பினும், அவரது கால்கள் நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கிய அருண், பாலு ஆகியோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்தது.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மதுரை மாவட்ட கலெக்டர் ராஜசேகர், போலீஸ் டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மாவட்ட சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் உயர் அதிகாரிகளும் அங்கு முகாமிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்டிட உரிமையாளர் மாதவனை செக்கானூரணி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Next Story