என்ஜினீயர் மீது சேற்றை ஊற்றிய நிதேஷ் ரானே எம்.எல்.ஏ.வுக்கு 4 நாள் போலீஸ் காவல்


என்ஜினீயர் மீது சேற்றை ஊற்றிய நிதேஷ் ரானே எம்.எல்.ஏ.வுக்கு 4 நாள் போலீஸ் காவல்
x
தினத்தந்தி 6 July 2019 12:12 AM GMT (Updated: 6 July 2019 12:12 AM GMT)

நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் மீது சேற்றை ஊற்றிய நிதேஷ் ரானே எம்.எல்.ஏ.வை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

சிந்துதுர்க் மாவட்டம் கன்கவலியில் உள்ள மும்பை- கோவா நெடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் சுவாபிமான் கட்சி தலைவர் நாராயண் ரானேயின் மகனும், எம்.எல்.ஏ.வுமான நிதேஷ் ரானே தனது ஆதரவாளர்களுடன் ஆய்வு செய்தார். அப்போது, மழையின் காரணமாக சாலை குண்டும், குழியுமாக சேதம் அடைந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்த நிதேஷ் ரானே மற்றும் அவரது ஆதரவாளர்கள் நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் பிரகாஷ் செடேகர் என்பவரை பிடித்து, அவர் மீது வாளியில் சேற்றை நிரப்பி ஊற்றினர்.

மேலும் அவரை அங்குள்ள பாலத்தில் கட்டி வைக்கவும் முயற்சி செய்தனர். இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சம்பவம் தொடர்பாக என்ஜினீயர் பிரகாஷ் செடேகர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதேஷ் ரானே எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் 16 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் நேற்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

அப்போது கோர்ட்டு நிதேஷ் ரானே எம்.எல்.ஏ. உள்பட கைதான அனைவரையும் வருகிற 9-ந்தேதி வரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.


Next Story