பழுதடைந்த நீர்ப்பாசன மதகுகள் மறு கட்டுமானம் செய்ய வேண்டும் நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் பேச்சு
பழுதடைந்த நீர்ப்பாசன மதகுகள் மறு கட்டுமானம் செய்ய வேண்டும் என நாமக்கல்லில் நடந்த விவசாயிகளுக்கான குடிமராமத்து பணிகள் குறித்த விளக்கக் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள பாசனதாரர் சங்கத்தை சேர்ந்த விவசாயிகளுக்கான விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். பின்னர் அவர்பேசியதாவது:-
ஆறுகள், ஏரிகள் மூலமாக பாசன வசதி பெற்று விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் பாசன பகுதிகளில் தேவையான பாசன மேம்பாட்டு திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு திட்டம் தான் குடிமராமத்து திட்டம். தமிழக அரசு குடிமராமத்து திட்டப்பணிகளை மேற்கொள்ள சில விதிமுறைகளை வைத்துள்ளது. குறிப்பாக கரை, மதகு, கலிங்கு மற்றும் வாய்க்காலை புனரமைக்கும் பணிகளின்போது சில விதிமுறைகளை கடைபிடிக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.
பழுதடைந்த நீர்ப்பாசன மதகுகள் உடைக்கப்பட்டு மறு கட்டுமானம் செய்யப்பட வேண்டும். சற்றே பழுதடைந்த மதகுகள் சரியான முறையில் பழுது பார்க்கப்பட வேண்டும். மறு கட்டுமானம் செய்யப்படும் மதகுகளின் கான்கீரிட் வேலைகள் தரமான முறையில் க்யூரிங் செய்யப்பட வேண்டும். தரமான கான்கீரிட் கொண்டு ஸ்கின் வால் சுவர் அமைக்கப்பட வேண்டும். வாய்க்கால்களில் வளர்ந்துள்ள புதர்கள் அகற்றப்படவேண்டும். வாய்க்கால்களின் அபாயகரமான இடங்களில் கான்கீரிட் சுவர் அமைக்கப்பட வேண்டும். வாய்க்கால்களின் இரு பக்கமும் சரியான அளவில் சாய்வுகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
குடிமராமத்து பணி நடைபெறும் இடங்களில் பணியின் பெயர், கிராமம், வட்டம், மற்றும் மாவட்டத்துடன் மதிப்பீட்டுத் தொகை, பணி முடியும் காலம், பணியில் செய்யப்படும் இனங்கள் குறித்த விவரத்துடன் கூடிய பணி விவர பெயர் பலகை வைக்கப்படவேண்டும்.
குடிமராமத்து பணிகள் மேற்கொள்வதன் மூலம் பணிகளை மேற்கொள்ளும் பாசனதாரர்களின் விவசாய நிலங்களே பயன்பெற உள்ளதால் விவசாயிகள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும். இவ் வாறு கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்தார்.
கூட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் கவுதமன், உதவி செயற்பொறியாளர் கவிதாராணி, மேட்டூர் அணைக்கோட்ட செயற்பொறியாளர் தேவராஜன், இணை இயக்குனர் (வேளாண்மை) சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லிராஜ்குமார், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story