குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 July 2019 10:45 PM GMT (Updated: 6 July 2019 7:29 PM GMT)

கீழக்கணவாயில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அரியலூர்,

போதிய மழையின்மை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு ஏரி, குளங்கள் தண்ணீரின்றி பரிதாபமாக காட்சியளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் கேட்டு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாய் கிராமத்தில் ஏற்கனவே குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் அவர்கள் அவ்வப்போது மறியல் போராட்டம் உள்ளிட்டவைகளில் ஈடுபடுவது வழக்கம். அப்போது அதிகாரிகள் அந்த பகுதிக்கு போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைத்து சமாதானம் செய்வார்கள்.

இந்நிலையில் தற்போது அந்தப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் தட்டுப்பாட்டால், அருகே உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் பிடிக்க அந்தப்பகுதி பொதுமக்கள் சென்று வருகின்றனர். ஆனால் அவர்களை அருகே உள்ள கிராம மக்கள் தண்ணீர் பிடிக்க விடாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.

காலிக்குடங்களுடன் சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் மற்றும் பெண்கள் கீழக்கணவாய் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக்கோரி நேற்று காலை காலிக்குடங்களுடன் செஞ்சேரி- செட்டிகுளம் சாலையில் திடீரென்று அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து 1 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர். 

Next Story