வேலூர் தொகுதி தேர்தல், தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் அ.தி.மு.க.கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.கூட்டணி கட்சியினர் பொய் பிரசாரத்தை நடத்தி வெற்றிபெற்றார்கள். ஆனால் தற்போது நடைபெற உள்ள வேலூர் தொகுதி தேர்தல் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் தேர்தலாக அமையும் என அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கூறினார்.
வேலூர்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி நடக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் வேலூரில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வேலூர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 10 நாட்களுக்கு முன்பாகவே முடிவடைகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கூட்டணிக்கட்சி தலைவர்கள் அனைவரும் சந்திந்து பிரசாரத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்க உள்ளோம்.
நான் கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்தப்படியே வேலை வாய்ப்பு முகாம், மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்த மாதம் 12-ந் தேதிக்கு பின்னர் அவை நடத்தப்பட உள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வசிக்கும் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் மூலம் வேலை பெற்றுத்தர திட்டமிட்டுள்ளோம்.
அதேபோன்று ஒரு சட்டமன்ற தொகுதியில் 110 மாணவர்களுக்கு கல்லூரியில் இடஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அதற்கான விண்ணப்பம் வழங்கும் இடமும் அறிவிக்கப்பட்டது. தற்போது மாணவர்கள் நேரடியாக கல்லூரியை அணுகினால் இடஒதுக்கீடு செய்யப்படும்.
மத்திய அரசின் பட்ஜெட், தொலைதூர காலத்தை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறந்த பட்ஜெட்டாகும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த 37 பேர் வெற்றி பெற்று எம்.பி.க்களாகியுள்ளனர். அவர்கள் பொய் பிரசாரத்தின் மூலம் மக்களை திசை திருப்பி வென்றனர்.
ஆனால் இந்த தேர்தல் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மக்கள் சிந்தித்து நல்ல தீர்ப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் எதற்காக நிறுத்தப்பட்டது?, தற்போது தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுகிறார்? என்பதை மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிப்பார்கள்.
மத்தியில் நடைபெறும் மோடி அரசுக்கும், மாநிலத்தில் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் எதிராக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். வேலூர் நாடாளுமன்ற தொகுதியை மருத்துவ முகாம்கள் மூலம் நோயற்ற தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். அதேபோன்று 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உலக தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
மேலும் நிலத்தடி நீரை அதிகப்படுத்தவும், குளங்கள், ஏரிகளை தூர்வாரவும், மரங்கள் வளர்க்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், ஆவின் தலைவர் வேலழகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், டி.கே.ராஜா, தமிழ் மாநில காங்கிரஸ் மத்திய மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story