கவர்னர் கிரண்பெடி மீது நடவடிக்கை எடுப்போம் - புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி பேட்டி


கவர்னர் கிரண்பெடி மீது நடவடிக்கை எடுப்போம் - புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 6 July 2019 11:30 PM GMT (Updated: 6 July 2019 8:53 PM GMT)

கவர்னர் கிரண்பெடி மீது நடவடிக்கை எடுப்போம் என்று புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார்.

ஈரோடு,

ஈரோட்டில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி நேற்று பரிசுகளை வழங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு புதிய கல்வி கொள்கை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் ஆங்கிலம், இந்தி மற்றும் மாநில மொழி என மும்மொழி கொள்கை இடம்பெற்றிருந்தது. இந்தியை கட்டாயமாக்கும் வகையில் இருந்த அந்த அறிவிப்புக்கு தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சி சார்பிலும் வலியுறுத்தப்பட்டது. புதுச்சேரியில் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

தமிழகம், புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் அகழ்வாராய்ச்சிக்கு வேதாந்தா, ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இதில் மாநில அரசுகளுக்கு தெரியாமலேயே அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தினால் விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாடு, புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியம் மத்திய அரசுக்கு கிடையாது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே எதிர்ப்பு தெரிவித்தோம். எனவே இந்த திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்கமாட்டோம். ராணுவத்தை கொண்டு வந்து இறக்கினாலும் போராட்டத்தை சந்திக்க தயாராக உள்ளோம்.

புதுச்சேரி கவர்னர் எங்களுடைய அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். மக்கள் நலன் திட்டங்களை நிறைவேற்ற முட்டுக்கட்டையாக இருக்கிறார். அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார். அதிகாரம் இல்லாமல் அரசு அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பல இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதை கண்டித்து அவருக்கு கடிதம் எழுதினேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மட்டுமே ஆட்சி அதிகாரம், நிதி அதிகாரம், நிர்வாக அதிகாரம் உள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்று இருக்கிறோம். ஆனால் ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி கவர்னர் கிரண்பெடி செயல்படுகிறார். பிரதமர், உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவித்தும் கவர்னர் கிரண்பெடி செவிசாய்ப்பதாக இல்லை. அவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவை மீறி கிரண்பெடி செயல்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளோம். எனவே புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெற வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரான வைத்தியலிங்கம் எம்.பி. 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதே அதற்கு உதாரணம். எங்களது ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்து உள்ளனர். இதை புரிந்து கொள்ளாமல் கவர்னர் கிரண்பெடி தொல்லை கொடுக்கிறார். அவரை எதிர்த்து போராடும் சக்தி எங்களிடம் உள்ளது. கோர்ட்டு உத்தரவை மீறி செயல்படும் அவர் மீது மேல்நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விண்ணை எட்டியுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளது. குறைந்த விலையில் கச்சா எண்ணெயை மத்திய அரசு வாங்கி சுத்திகரிப்பு செய்து அதிக விலைக்கு மக்களுக்கு கொடுக்கிறது. பெட்ரோல், டீசல் லாபத்தை ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடியை மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. இதன் விலை உயர்வால் பஸ் கட்டணம் உயரும். பணவீக்கம் ஏற்படும். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார்.

Next Story