திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை


திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 7 July 2019 4:30 AM IST (Updated: 7 July 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்புவனம்,

மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது திருப்புவனம். இங்குள்ள அரசு மருத்துவமனையில் திருப்புவனம், வடகரை, மடப்புரம், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், வன்னிக்கோட்டை, நயினார்பேட்டை, அல்லிநகரம், கலியாந்தூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். தினமும் புறநோயாளியாக சுமார் ஆயிரம் பேர் வரை வந்து சிகிச்சை பெற்று செல்லுகின்றனர். அதே போல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் உள் வசதி பிரிவும் உள்ளது.

பிரசவ சிகிச்சை முறையும் நடைபெற்று வருகிறது. 100 பேருக்கு ஒரு டாக்டர் வீதம் சிகிச்சை அளித்தாலும் 10 டாக்டர்கள் இருக்க வேண்டும். ஆனால் இங்கு 5 டாக்டர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதிலும் சிலர் மாற்று பணியில் தான் இங்கு வருகின்றனர். இதனால் கிராமங்களில் இருந்து வரும் நோயாளிகள் அதிக நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதேபோல் மருந்துகள் கொடுக்கும் பணியில் ஒருவர் மட்டுமே உள்ளார். இவர் தான் அனைத்து நோயாளிகளுக்கும் மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டும்.

ஆயிரம் பேர் வந்து சிகிச்சை பெற்று செல்லும் மருத்துவமனையில், நோயாளிகளை விட்டு செல்லும் கழிவுகளை அகற்ற துப்புரவு பணியாளர்கள் ஒருவர் கூட இல்லை. இதேபோல் திருப்புவனம் பகுதியில் நடைபெறும் விபத்துகளால் உயிர் பலி ஏற்பட்டால் பிரேத பரிசோதனை செய்ய உதவியாளர்களை வேறு மருத்துவமனையிலிருந்து அழைத்துவரும் சூழ்நிலை உள்ளது.

நோயாளிகள், அவர்களுடன் வருபவர்கள் என கூட்டம் அதிகம் வருவதால் குடி தண்ணீர் வசதி போதிய அளவு இல்லை. இருக்கும் சிறிய அளவிலான ஒரு சுத்திகரிப்பு எந்திரமும் அடிக்கடி பழுதாகிவிடுகிறது. இந்த அளவிற்கு அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை உள்ளதால், உடனடியாக கூடுதல் டாக்டர்கள், பணியாளர்கள், உதவியாளர்களை நியமனம் செய்தும், பெரிய அளவிலான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story