8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உழவர் பேரியக்க கூட்டத்தில் முடிவு


8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உழவர் பேரியக்க கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 7 July 2019 10:30 PM GMT (Updated: 7 July 2019 5:33 PM GMT)

8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என உழவர் பேரியக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அயோத்தியாபட்டணம், 

சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நிலத்தை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சாலைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக கோர்ட்டில் விவசாயிகள் மற்றும் சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து, விவசாயிகளுக்கு அவர்கள் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசின் மேல்முறையீட்டில், கோர்ட்டில் அளித்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்கவில்லை.

இந்தநிலையில் சேலம் குப்பனூரில் உழவர் பேரியக்கம் சார்பில் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உழவர் பேரியக்க தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில், 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக இந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போது வருகிற 15-ந் தேதி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தின்போது 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும் இதுதொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தப்படும் என்பன உள்பட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

மேலும் வழக்குக்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story