தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 3 பேர் சாவு


தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 3 பேர் சாவு
x
தினத்தந்தி 7 July 2019 10:15 PM GMT (Updated: 7 July 2019 11:28 PM GMT)

தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநத்தம்,

தொழுதூரை சேர்ந்தவர் அந்தோணி மகன் ஆரோக்கியராஜ்(வயது 32). இவர் நேற்று முன்தினம் மாலை ராமநத்தம் பஸ் நிறுத்தம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று ஆரோக்கிய ராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆரோக்கியராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கீரிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன்(40), இவர் நேற்று காலை, தனது டிராக்டரில் கழுதூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்தவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஜெயராமன், திடீரென பிரேக் பிடித்தார். இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொண்டா இருப்பு கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன்(40) விவசாயி. இவர் நேற்று காலை சேத்தியாத்தோப்பில் இருந்து சோழத்தரம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அதேபோல் அரியலூர் மாவட்டம் குணமங்கலம் உடையார்பாளையத்தை சேர்ந்த கருப்பையன், ராஜா(35) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சோழத்தரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மாமங்களம் ஓம்சக்தி கோவில் அருகே வந்தபோது நிலைதடுமாறி பூமிநாதன் மீது மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த பூமிநாதனை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த கருப்பையன், ராஜா ஆகிய இருவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்து சோழத்தரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story