மதுரை அருகே வேன்- ஆட்டோ மோதல்; டிரைவர்கள் பலி


மதுரை அருகே வேன்- ஆட்டோ மோதல்; டிரைவர்கள் பலி
x
தினத்தந்தி 8 July 2019 12:07 AM GMT (Updated: 8 July 2019 12:07 AM GMT)

மதுரை அருகே வேனும் ஆட்டோவும் மோதிக்கொண்டதில் 2 டிரைவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்புவனம்,

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் பகுதியை சேர்ந்த சிலர் நேற்று சாமி கும்பிட ஒரு வேனில் சிவகங்கை மாவட்டம் மடப்புரத்திலுள்ள கோவிலுக்கு சென்றனர். வேனை ஜெயச்சந்திரன்(வயது46) என்பவர் ஓட்டிச்சென்றார். சாமி தரிசனம் முடித்து விட்டு அனைவரும் நேற்று மாலை மதுரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

மதுரை அருகே கீழடி விலக்கு பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திருப்புவனம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த காளிமுத்து (36) என்பவர் எதிரே ஆட்டோ ஓட்டி வந்தார். ஆட்டோவில் அவர் மட்டுமே இருந்தார்.

எதிர்பாராதவிதமாக வேனும் ஆட்டோவும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் வேனின் முன்பக்க டயர் கழன்று ஓடியது. ஆட்டோவும் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவர் ஜெயச்சந்திரன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோ டிரைவரான காளிமுத்து படுகாயம் அடைந்தார்.

விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் இறந்தார். இந்த விபத்தில் வேனில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Next Story