மும்பையில், கர்நாடக எம்.எல்.ஏ.க்களை தங்க வைத்து ஜனநாயக படுகொலைக்கு மராட்டிய அரசு உதவுகிறது - அசோக் சவான் குற்றச்சாட்டு


மும்பையில், கர்நாடக எம்.எல்.ஏ.க்களை தங்க வைத்து ஜனநாயக படுகொலைக்கு மராட்டிய அரசு உதவுகிறது - அசோக் சவான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 July 2019 11:00 PM GMT (Updated: 8 July 2019 12:09 AM GMT)

மும்பையில் கர்நாடக எம்.எல்.ஏ.க்களை தங்கவைத்து ஜனநாயக படுகொலைக்கு மராட்டிய அரசு உதவுவதாக அசோக் சவான் குற்றம் சாட்டியுள்ளார்.

மும்பை, 

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க் கள் நேற்று முன்தினம் திடீரென்று ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 118 எம்.எல்.ஏ.க் களை கூட்டணி கொண்டுள்ள நிலையில் ராஜினாமா ஏற்கப்பட்டால் அரசு பெரும்பான்மையை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறது. இந்நிலையில் கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பைக்கு அழைத்து வரப்பட்டு நட்சத்திர ஓட்டலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் தங்கியிருப்பது குறித்து மராட்டிய காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் சவான் ஆளும் பா.ஜனதா அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ பா.ஜனதா கர்நாடகாவில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறது.

மராட்டியத்தை ஆளும் பா.ஜனதா அரசு இந்த ஜனநாயக படுகொலைக்காக அரசு எந்திரங்களை தவறாக பயன்படுத்தி உதவு புரிகிறது” என்றார்.

ஆனால் இதை பா.ஜனதா மறுத்துள்ளது. இதுகுறித்து பா.ஜனதா கட்சியின் மராட்டிய செய்தி தொடர்பாளர் கேசவ் உபாத்யாய் கூறுகையில், “ மும்பையில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருப்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. இதில் எங்கள் பங்கு ஏதும் இல்லை. இதில் நாங்கள் ஏதும் செய்யவில்லை. என்றார்.

இந்த நிலையில் நேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஓட்டலை காங்கிரஸ் இளைஞர் அணியினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story