நெல்லை அருகே விபத்தில் பலியான 5 பேர் பற்றி உருக்கமான தகவல்கள்


நெல்லை அருகே விபத்தில் பலியான 5 பேர் பற்றி உருக்கமான தகவல்கள்
x
தினத்தந்தி 8 July 2019 10:15 PM GMT (Updated: 8 July 2019 6:10 PM GMT)

நெல்லை அருகே விபத்தில் பலியான 5 பேரை பற்றிய உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன.

நெல்லை,

தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தை சேர்ந்தவர்கள் சேவியர், நிக்கோலஸ், பன்னீர்செல்வம், அருள்மணி. இவர்கள் 4 பேரும் மீனவர்கள். இவர்கள் கன்னியாகுமரியில் தங்கியிருந்து மீன் பிடித்து வந்தனர். கன்னியாகுமரியில் இருந்து இவர்கள் நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு சுற்றுலாவாக நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் புறப்பட்டு வந்தனர். தூத்துக்குடி மாதாநகரை சேர்ந்த மாடசாமி காரை ஓட்டினார்.

இவர்களுடைய நண்பர் மாரியப்பன் பத்தமடையில் இருந்தார். அவரையும் காரில் ஏற்றிக்கொண்டு 6 பேரும் குற்றாலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். நள்ளிரவில் பத்தமடையை அடுத்த கொழுமடை அருகில் சென்றபோது, எதிரே விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து நெல்லை நோக்கி வந்த தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில், காரில் இருந்த சேவியர், நிக்கோலஸ், பன்னீர்செல்வம், டிரைவர் மாடசாமி, மாரியப்பன் ஆகிய 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக இறந்தனர். அருள்மணி படுகாயம் அடைந்தார். பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பன்னீர்செல்வம் தூத்துக்குடியில் ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார். இவருடைய மனைவி ராஜகனி மரியாள். இவர்களுடைய மகள் சூர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

ராஜகனி மரியாளின் தம்பி நிக்கோலஸ். இவரும், சேவியரும் கன்னியாகுமரியில் விசைப்படகுகளில் டிரைவராக வேலை பார்த்து வந்தனர். விபத்தில் காயம் அடைந்த அருள்மணி தூத்துக்குடியில் முன்னாள் தியேட்டர் உரிமையாளர் ஆவார். இவர் தற்போது கன்னியாகுமரியில் விசைப்படகில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களாக கன்னியாகுமரியில் நடந்த மீனவர்கள் பிரச்சினை காரணமாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் நிக்கோலஸ், சேவியர், அருள்மணி ஆகியோர் ஊருக்கு வந்து இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் குற்றாலம் செல்ல முடிவு செய்தனர். அதன்படி பன்னீர்செல்வத்தின் நண்பரான மாடசாமியின் காரில் 5 பேரும் குற்றாலத்துக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றனர். அப்போது, பன்னீர்செல்வத்தின் ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்த்த பத்தமடையை சேர்ந்த மாரியப்பனையும் அங்கு சென்று காரில் அழைத்துக்கொண்டு சென்றபோது இந்த கோர விபத்து நேர்ந்தது தெரியவந்து உள்ளது. 

Next Story