வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. போட்டியிடாது - டி.டி.வி. தினகரன் அறிவிப்பு


வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. போட்டியிடாது - டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 July 2019 11:00 PM GMT (Updated: 8 July 2019 11:45 PM GMT)

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடாது என்று டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் நேற்று நடந்த அ.ம.மு.க. நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்ட டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து வேறு கட்சிக்கு சென்றவர்களால் இயக்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ‘லெட்டர் பேடு’ கட்சி என்று கூறியவர்கள், என்னை தனி மரம் என்றவர்கள், அ.ம.மு.க. நிர்வாகிகளை போலீசார் மூலம் மிரட்டி அ.தி.மு.க.வில் இணைய அழைக்கின்றனர்.

உளவுத்துறை அரசுக்கு புரோக்கர் போல செயல்படுகிறது. மக்களின் பிரச்சினையான குடிநீர் பிரச்சினையில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சீர்குலைப்பதற்கான வேலையை செய்து வருகின்றனர். தற்போது கட்சியை பதிவு செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளோம். ஒவ்வொரு தேர்தலிலும் வேறு வேறு சின்னத்தில் சுயேட்சையாக நிற்க வேண்டாம் என எங்கள் கட்சி நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளோம். கட்சியை பதிவு செய்து அதன் பிறகு தேர்தலில் நிற்கலாம் என முடிவு செய்துள்ளோம்.

அதனால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடாது. கட்சியை பதிவு செய்வதற்கு முன்பு விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால், ஒவ்வொரு தொகுதியிலும் வேறு வேறு சின்னத்தில் நிற்க கூடிய நிலைமை ஏற்படும்.

தேர்தலுக்கு முன்பு நிலையான சின்னம் கிடைத்தால் தான் இடைத்தேர்தலிலும் போட்டியிடுவோம். மேல்சபை தேர்தலில் வாக்களிக்க கூடிய தேவை இருக்காது என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story