நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை: என் மீது குற்றம்சாட்டி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள் பேட்டி


நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை: என் மீது குற்றம்சாட்டி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள் பேட்டி
x
தினத்தந்தி 26 July 2019 11:30 PM GMT (Updated: 26 July 2019 11:30 PM GMT)

நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை தொடர்பாக என் மீது குற்றம் சாட்டி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி நடப்பதாக மதுரையில் தி.மு.க. பிரமுகரான சீனியம்மாள் பேட்டி அளித்தார்.

மதுரை,

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன் மற்றும் அவர்களது வீட்டில் வேலை பார்த்து வந்த பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர், பாளையங்கோட்டையில் உள்ள உமாமகேசுவரியின் வீட்டில் கடந்த 23–ந் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் அரசியல் காரணங்களுக்காக நடந்ததா? என்பதை அறிய இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் திடீரென அந்த படையினர் மதுரை வந்து, கூடல்புதூரில் மகள் வீட்டில் தங்கி உள்ள நெல்லையை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான சீனியம்மாளிடம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சீனியம்மாள் மதுரையில நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உமாமகேசுவரி மிகவும் அமைதியானவர். அரசியலில் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியவர். அவருக்கும் எனக்கும் எந்த அரசியல் போட்டியும் இருந்தது இல்லை. கட்சி நிகழ்ச்சிகளில் அவரை சந்தித்திருக்கிறேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை.

எனக்கு உடல்நிலை சரிஇல்லாத காரணத்தினால் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் மதுரையில் உள்ள எனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன்.

உமா மகேசுவரி கொலை செய்யப்பட்டது குறித்த தகவலை சம்பவம் நடந்த அன்று இரவு 7 மணிக்கு டி.வி.யை பார்த்து தெரிந்து கொண்டேன். அப்போது கூட, நல்ல மனம் படைத்த அவருக்கு இப்படி நடந்து விட்டதே என்று கண்கலங்கினேன். தி.மு.க.வில் நான் மாநில நிர்வாகியாக உள்ளேன். ஆனால் அவர் மாவட்ட நிர்வாகியாகத்தான் உள்ளார். எனவே கட்சி பதவிக்காகவோ அல்லது தேர்தலில் சீட் வாங்கி தரக்கோரி அவரிடம் பணம் கொடுத்தோ நான் ஏமாறவில்லை.

போலீசார் இந்த கொலை வழக்கு தொடர்பாக என்னிடம் விசாரித்தனர். எனக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்களிடம் கூறினேன். போலீசார் சந்தேகத்தின் பேரில் 100 பேரிடம் விசாரித்தால் அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் கிடையாது. என் மீது குற்றம்சாட்டி தி.மு.க.வுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். போலீசார் உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்களை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story