வீரர்கள் நினைவாக நடப்பட்ட 2,300 ஆண்டுகள் பழமையான நெடுங்கல் கண்டெடுப்பு


வீரர்கள் நினைவாக நடப்பட்ட 2,300 ஆண்டுகள் பழமையான நெடுங்கல் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 31 July 2019 5:00 AM IST (Updated: 30 July 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

வீரர்களின் நினைவாக நடப்பட்ட 2,300 ஆண்டுகள் பழமையான நெடுங்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

கற்காலத்தில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த பண்டைய தமிழ் சமூகத்தினர் தங்கள் இனக்குழுவில் இறந்தவர்களை இயற்கையாக அழியும் வகையில் அப்படியே விட்டுவிட்டனர். பின்பு வந்த புதிய கற்காலத்தில் தான் தமக்கென நிலையான குடியிருப்பு பகுதிகளை ஏற்படுத்திக்கொண்டு குழி வீடுகளிலும், வட்டம் மற்றும் நீள்வட்ட வடிவிலான புல் வேய்ந்த கூரை வீடுகளிலும் வாழத்தொடங்கினர்.

இந்த மக்கள் கால்நடை வளர்ப்பிலும், வேளாண்மையிலும் ஈடுபட்டனர். தாங்கள் விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெறுவதற்காக ‘‘வளமை வழிபாட்டையும்’’ தாய்த்தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டனர். வேட்டையில் நிறைய விலங்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் புதிய கற்கால கருவிகளையும் நிலத்தில் நட்டு வழிபட்டார்கள். இந்த புதிய கற்கால மக்கள் தான் முதன்முதலில் இறந்தவர்களை தங்கள் வீடுகளுக்கு அருகில் குழி தோண்டி அடக்கம் செய்யும் முறையை தொடங்கி தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தனர்.

இதற்கு அடுத்து வந்த பெருங்கற்காலத்தில் தான் (கி.மு.1000 முதல் கி.பி. 100) வரை மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு வெளியே சற்று தொலைவில் தனியாக வேளாண்மை மற்றும் குடியிருப்புக்கு பயன்படாத ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறையை மேற்கொண்டனர். இவர்கள் இறந்தவர்களை புதைப்பதற்கு பெருங்கற்களை பயன்படுத்தி கல்லறைகளை ஏற்படுத்தியதால் இக்காலம் பெருங்கற்காலம் என்றே அழைக்கப்படுகிறது.

இந்த பண்பாட்டு காலத்திற்குரிய சில சிறப்பம்சங்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. எனவே இதன் இறுதிக்காலம் சங்க காலத்தோடு தொடர்புடையதாக காணப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த மோ.சந்திரன், ரா.குமரவேல், ந.சுதாகர், க.பொன்னுச்சாமி, சு.வேலுச்சாமி மற்றும் பேராசிரியர் சா.மு.ரமேஷ்குமார் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வின்போது கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவில் பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் பிரதான சாலையில் 5 கி.மீ தொலைவில் உள்ள ஆச்சிப்பட்டி பிரிவிலிருந்து கிழக்கே 1 கி.மீ தொலைவில் உள்ள குரும்பபாளையத்தில் சங்க காலத்தை சேர்ந்த நெடுங்கல் ஒன்றைக் கல் வட்டத்துடன் கண்டெடுத்துள்ளனர்.

இது பற்றி ஆய்வு மையத்தின் இயக்குனர் என்ஜினீயர் சு.ரவிக்குமார் கூறியதாவது:–

உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் இறப்புக்கு பின்பும் தங்கள் ஆன்மா வாழும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இறந்த வீரர்களின் ஆன்மா என்றுமே தங்கள் இனக்குழுவிற்கு பாதுகாப்பாக இயங்கும் என்றும் நம்புகின்றனர். தங்களுக்குத் துன்பம் ஏற்படும் போது இந்த ஆன்மாவை மகிழ்வித்தால் தங்களுக்கு நன்மை செய்யும் என்ற நம்பிக்கையில் அதற்கு வழிபாடும், படையலும் மேற்கொள்கின்றனர்.

பண்டைய காலத்தில் ஒரு இனக்குழுவை சேர்ந்தவர்கள் மற்றொரு இனக் குழு கூட்டத்தின் மீது அடிக்கடி தங்கள் மேலாண்மையை நிலைநாட்டவும், தங்கள் இனக்குழு மக்கள் வாழும் நிலப்பரப்பை விரிவுபடுத்தவும், கால்நடைகளை கவர்வதற்காகவும் போர் தொடுத்தனர். இந்தப் போரில் வீர மரணம் அடைந்த வீரனின் நினைவாகவும் வீரத்தின் அடையாளமாகவும் சுமார் 10 முதல் 15 டன் எடை கொண்ட கற்களைப் பயன்படுத்தி இப்பெருங்கற்படை சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதைப் பார்க்கும்போது ஒரு சமுதாயமே முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்பது மிக நன்கு புலனாகிறது. இங்கு நமக்கு கிடைத்துள்ள நெடுங்கல் 14 அடி உயரமும், அதன் கீழ்ப்பகுதி 4 அடி அகலமும் கொண்டதாகும். இந்த நெடுங்கல்லுக்கு முன்பாக 20 அடிச்சுற்றளவும் 55 செ.மீ உயரமும் கொண்ட ஒரு கல்வட்டமும் காணப்படுகிறது.

இந்த நெடுங்கல்லும், கல் வட்டமும் பண்டைய காலத்தில் அங்கு வாழ்ந்த இனக் குழுவின் தலைவனுக்காக ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். தங்கள் இனக்குழுவிற்காக இன்னுயிர் ஈந்த வீரர்களின் மீது பண்டைய மக்கள் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்ததை நாம் அறியமுடிகிறது. மேலும் இங்கு கிடைக்கும் கருப்பு சிவப்பு வண்ணப் பானை ஓடுகள் மூலம் குரும்பபாளையம் கிராமம் 2,300 ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்விடமாகவும் அதன் சார்ந்த இடமாகவும் திகழ்வதை அறியமுடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story