மாவட்ட செய்திகள்

நிதி நிறுவனங்களில் புகுந்து ரூ.1 லட்சம் கொள்ளை அடித்ததாக 3 வாலிபர்கள் கைது + "||" + Robbery in financial institutions 3 men arrested

நிதி நிறுவனங்களில் புகுந்து ரூ.1 லட்சம் கொள்ளை அடித்ததாக 3 வாலிபர்கள் கைது

நிதி நிறுவனங்களில் புகுந்து ரூ.1 லட்சம் கொள்ளை அடித்ததாக 3 வாலிபர்கள் கைது
நிதி நிறுவனங்களில் புகுந்து ரூ.1 லட்சம் கொள்ளை அடித்ததாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மொடக்குறிச்சி,

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்தவர் நல்லசாமி. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 24–ந் தேதி மதியம் 1.30 மணி அளவில் வாலிபர் ஒருவர் நிதி நிறுவனத்துக்கு வந்தார். பின்னர் நல்லசாமியிடம் மொடக்குறிச்சி பெட்ரோல் பங்க் அருகே ஒரு விபத்து நடந்து விட்டது. மொபட்டில் வந்த வெள்ளக்கோவில் பெண் ஒருவர் உயிருக்கு போராடுகிறார். உங்களுக்கு தெரிந்தவராம் சென்று பாருங்கள் என்று கூறினார். அதனால் நல்லசாமி நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு பெட்ரோல் பங்க் நோக்கி சென்றார்.

அங்கே சென்றதும், எந்த விபத்தும் நடைபெறவில்லை என்று தெரிந்தது. அதனால் பதறி அடித்து நிதி நிறுவனத்துக்கு நல்லசாமி வந்து பார்த்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த 82 ஆயிரத்து 500 ரூபாயை காணவில்லை. உடனே நிதி நிறுவனத்தில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை எடுத்து பார்த்தார். அப்போது விபத்து நடந்ததாக கூறிய மர்ம நபர் பூட்டை உடைத்து நிதி நிறுவனத்துக்குள் புகுவதும், பின்னர் உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடித்து செல்வதும் தெரிந்தது.

அதேநாளில் மதியம் 2 மணி அளவில் சிவகிரி தாண்டாம்பாளையத்தை சேர்ந்த குருமூர்த்தி என்பவர் எழுமாத்தூரில் நடத்தி வந்த ஒரு நிதி நிறுவனத்தின் பூட்டும் உடைக்கப்பட்டு, உள்ளே வைக்கப்பட்டு இருந்த ரூ.16 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டது.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் நல்லசாமியும், குருமூர்த்தியும் மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்கள். அதன்பேரில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் ஈரோட்டை அடுத்த சோலாரில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள்.

அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது கண்காணிப்பு கேமராவில் கண்ட மர்ம நபரின் உருவம், மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவரின் உருவத்தை போலவே இருந்தது. உடனே 3 பேரையும் போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அவர்கள் ஈரோடு வீரப்பன் சத்திரம் குழந்தையம்மாள் வீதியை சேர்ந்த கிங் சிவா என்கிற சிவா (21), வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் வீதியை சேர்ந்த அப்துல்லா (25), சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டி.டி.நகரை சேர்ந்த ப்ரியகண்ணன் (25) ஆகியோர் என்பதும், இவர்கள் மேலும் 3 பேருடன் சேர்ந்து 2 நிதி நிறுவனங்களில் திட்டம் போட்டு ரூ.1 லட்சம் கொள்ளை அடித்ததும் தெரிந்தது.

இதைத்தொடர்ந்து கிங் சிவா, அப்துல்லா, ப்ரியகண்ணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொள்ளை அடிக்கப்பட்ட பணம் தலைமறைவாக உள்ளவர்களிடம் இருப்பதாக தெரிகிறது. அதனால் அவர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.