டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் - 40 பேர் கைது


டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் - 40 பேர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2019 5:00 AM IST (Updated: 5 Aug 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

கீழக்கரை,

கீழக்கரையில் புதிய பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் ஆகியவற்றின் அருகில் 2 டாஸ்மாக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் மார்க்கெட்டிற்கு செல்லும் பெண்கள் அச்சத்தோடு செல்லும் நிலை இருந்து வருகிறது. இதனை அகற்றக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித பயனும் இல்லை.

இந்த நிலையில் நேற்று புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல செயலாளர் பத்மநாதன், தொகுதி செயலாளர் குமரன், மாவட்ட தலைவர் நாகூர்கனி, கீழக்கரை நகர் செயலாளர் ஹபீல் ரகுமான் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சுமார் 2½ மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து 40 பேரை போலீசார் கைது செய்து திருப்புல்லாணியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story