தமிழகத்தில் இருமொழி கல்வி கொள்கைதான் தொடரும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


தமிழகத்தில் இருமொழி கல்வி கொள்கைதான் தொடரும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 5 Aug 2019 11:15 PM GMT (Updated: 5 Aug 2019 6:41 PM GMT)

தமிழகத்தில் இருமொழி கல்வி கொள்கைதான் தொடரும் என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வேட்டைக்காரன்கோவிலில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் இதுவரை 45 லட்சத்து 72 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. 2017 மற்றும் 2018–ம் ஆண்டு படித்தவர்களுக்கும் விரைவில் மடிக்கணினிகள் வழங்கப்படும். விஞ்ஞான உலகத்தின் அடுத்த கட்டத்திற்கு மாணவர்களை அழைத்துச்செல்ல மலேசியா நாட்டின் அறிஞர்கள் துணையுடன் மாணவர்களுக்கு டேப் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

மாணவ–மாணவிகளின் நலனுக்காக விரைவில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏற்கனவே கட்டணம் செலுத்தியவர்களுக்கும், பணம் திருப்பி அளிக்கப்படும். மேலும் 2 மாத காலத்தில் பயோமெட்ரிக் முறை தொடக்கப்பள்ளிகளில் அமல்படுத்தப்படும்.

பாடப்புத்தகத்தில் வரும் பிழைகளுக்கு ஆசிரியர்கள் குழுதான் காரணம். அவர்கள் தான் எழுதுகிறார்கள். எனவே ஆசிரியர்கள் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அதிகாரிகள் எப்படி பொறுப்பு ஏற்பார்கள்? இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். மூத்த மொழி தமிழ்தான் என்பதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் மட்டுமல்ல அனைவரும் அதே கருத்தைதான் வலியுறுத்துகின்றனர்.

புதிய கல்விக்கொள்கையை பொறுத்தவரை தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் தொடரவேண்டும் என முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் தொடரும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


Next Story