மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அருகே வாலிபரை விரட்டிச்சென்று மிதித்து கொன்ற யானை + "||" + The elephant who chased and killed the young man

பவானிசாகர் அருகே வாலிபரை விரட்டிச்சென்று மிதித்து கொன்ற யானை

பவானிசாகர் அருகே வாலிபரை விரட்டிச்சென்று மிதித்து கொன்ற யானை
பவானிசாகர் அருகே வாலிபர் ஒருவரை யானை விரட்டி சென்று மிதித்து கொன்றது.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட விளாமுண்டி, பவானிசாகர் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகிறது. தற்போது வனப்பகுதியில் உள்ள மரம் மற்றும் செடி–கொடிகள் காய்ந்து கருகி வருகின்றன. குறிப்பாக வனக்குட்டைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீரை தேடி கிராமப்பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. இதில் யானைகள் மட்டும் அடிக்கடி கிராமப்பகுதிக்குள் புகுந்து வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை பவானிசாகர் அருகே நால்ரோட்டில் உள்ள புதர்மறைவில் நின்றது. யானை நிற்பதை கவனிக்காமல் அந்த வழியாக 60 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் நடந்து சென்றார்.

அப்போது திடீரென அந்த யானை, மூதாட்டியை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதனை கவனித்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர், யானையை விரட்ட முயற்சி செய்ததோடு மூதாட்டியை மீட்க முயன்றனர். இதனால் ஆவேசமடைந்த யானை பொதுமக்களையும் விரட்டியது.

இதன்காரணமாக அவர்கள் அனைவரும் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இதில் பவானிசாகர் நால்ரோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான உதயகுமார் (வயது 29) என்பவர் மட்டும் வனப்பகுதிக்குள் ஓடி உள்ளார். இதனால் அந்த யானை, அவரை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியதோடு, உதயகுமாரின் கால் மற்றும் தலையில் மிதித்து நசுக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்ததோடு மயங்கினார். பின்னர் அந்த யானை அங்கே சுற்றித்திரிந்தது.

இதனால் பொதுமக்கள் இதுகுறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பட்டாசுகள் வெடித்தும் தீப்பந்தங்கள் காட்டியும் அந்த யானையை காட்டுக்குள் விரட்டினார்கள். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் படுகாயம் அடைந்த உதயகுமார் மற்றும் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே உதயகுமார் பரிதாபமாக இறந்துவிட்டார். மூதாட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யானை மிதித்து வாலிபர் ஒருவர் இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் யானைகள் கிராமப்பகுதிக்குள் புகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இரவு 8 மணி அளவில் பவானிசாகர் நால்ரோடு பகுதியில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மேற்கொண்டு செல்லாமல் அப்படியே ஆங்காங்கே நின்றன. இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளால் கரும்பு, வாழைகள் உள்ளிட்ட பயிர்கள் நாசம் ஆகி உள்ளது. தற்போது ஒற்றை யானையால் வாலிபர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

அதனால் நாங்கள் பெருத்த அச்சத்தில் உள்ளோம். எனவே யானைகள் கிராமப்பகுதிக்குள் புகாத வகையில் அகழி அமைக்க வேண்டும். மேலும் யானை மிதித்த இறந்த உதயகுமாரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றனர். அதற்கு வனத்துறையினர் ‘உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு இரவு 9.30 மணி அளவில் அங்கிரந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.