காங்கிரஸ் கட்சி சார்பில், தமிழகம் முழுவதும் 22 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன - கே.எஸ். அழகிரி பேட்டி


காங்கிரஸ் கட்சி சார்பில், தமிழகம் முழுவதும் 22 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன - கே.எஸ். அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 5 Aug 2019 10:15 PM GMT (Updated: 5 Aug 2019 8:30 PM GMT)

தமிழகம் முழுவதும் 22 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை பகுதியில் சுமார் 140 ஏக்கர் பரப்பளவில் கொங்கர்குளம் கண்மாய் அமைந்துள்ளது. கடந்த மாதம் 27-ந்தேதி தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த கண்மாயில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. மகிளா காங்கிரஸ் கட்சி தலைவர் ஜான்சிராணி இதனை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் கண்மாய் தூர்வாரும் பணிகளை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் இதுவரை 22 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டு பிரதமர் மோடி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். இது கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் வசிக்கும் முஸ்லிம்கள் காஷ்மீர் இந்தியாவுடன் தான் இணைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதன் காரணமாகவே காஷ்மீர் இன்று வரை இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள முக்கிய தலைவர்களை கைது செய்யும் நடவடிக்கை மத்திய அரசு தவறான பாதையில் செல்வதை காட்டுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்ததால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் அப்படி நடக்காது. ஏனென்றால் நாம் மகாத்மா என்று அழைக்கும் காந்தியே காங்கிரஸ் கட்சியில் எந்த பதவியிலும் இருந்ததில்லை. எனவே மக்கள் பணி ஆற்றுவதற்கு கட்சி பதவி அவசியம் இல்லை. அவர் தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்வார்.

மேலும் நதிகள், அணைகளை தேசிய மயமாக்கும் பணியில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபடும். வேலூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணிக்கு பொதுமக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும். இதுதவிர தேர்தல் ஆணையம் யாருடைய உத்தரவுக்கும் அடிபணியாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நிலக்கோட்டை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு வட்டார தலைவர் கோகுல்நாத் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவி ஜான்சிராணி அனைவரையும் வரவேற்றார். கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனிராஜா முன்னிலை வகித்தார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், காங்கிரஸ் கட்சி மகிளா பிரிவு தலைவி சத்தியா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன், நிலக்கோட்டை நகர செயலாளர் நடராஜன் மற்றும் வட்டார நிர்வாகிகள் பவுனு, குணசேகரன், பாண்டி, கவுரிநாத், துரைசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story